பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுக்குப் பின் வரிசையில் இடம் குறித்து சர்ச்சை

stalin_dmkசென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, பொன்முடி, வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.
இவர்கள், 10 வரிசைக்கு அப்பால் அமரவைக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 98 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமரும் தகுதி பெற்ற ஸ்டாலின் கூட்டத்தோடு கூட்டமாக அமரவைக்கப்பட்டது தி.மு.கவை திட்டமிட்டு அவமானப் படுத்திய செயல் எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டாலினை கூட்டத்தோடு கூட்டமாக அமரவைத்துவிட்டு, தேர்தலில் தோற்றுப்போன சரத்குமாரை முதல் வரிசையில் அமரவைக்கப்பட்டதைப் பார்க்கும்போது, ஜெயலலிதா திருந்தவில்லை, திருந்தப்போவதுமில்லை எனத் தெரிவதாக கருணாநிதி கூறியிருக்கிறார்