இலங்கை மழை வெள்ளம், நிலச்சரிவு: 92 ஆக அதிகரித்த உயிரிழப்பு

malayagam01இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
மழை வெள்ளம் தற்போது குறைந்து வருவதால் கணிசமான குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இடர் முகாமைத்துவ அமைச்சகத்தினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது.மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளான கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களை கொண்ட மேல் மாகாணத்தில் ஏற்கனவே 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 37 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 70 ஆயிரமாக குறைந்துள்ளது.
 
இந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்தும் வருகின்றது.

திங்கட்கிழமை நண்பகல் நிலவரப்படி 92 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 109 ஆக குறைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சகம் கூறியுள்ளது.
கேகாலை மாவட்டத்திலேயே கூடுதல் உயிரிழப்புகள்
கேகாலை மாவட்டம் அரநாயக்க சம்பவத்தில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் மட்டும் 105 பேர் காணாமல் போயுள்ளனர்.
 
மாவட்ட ரீதியான தகவல்களின்படி நிலச்சரிவு அனர்த்தங்களின் போது கேகாலை மாவட்டத்திலே கூடுதலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அரநாயக்க, தெகியோவிற்ற மற்றும் புளத்கோபிட்டிய ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆகும்.

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் புதையுண்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவுகள் காரணமாக 64 மரணங்கள் பதிவாகியுள்ள அதே வேளை 29 மரணங்கள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 15 பேரும், வடமத்திய மாகாணத்தில் – 04 பேரும், வட மேல் மாகாணத்தில் 9 பேரும், தென் மாகாணத்தில் 2 பேரும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிழந்துள்ளதாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களும் முன் வந்துள்ளனர்.

சமூக சமய அமைப்புகள் முன் வந்து நிவாராண பொருட்களை சேகரித்து வருகின்றன. இதனைத் தவிர அரசாங்கம் மற்றும் தனியார் துறை அலுவலகங்களினாலும் நிதி மற்றும் நிவாரணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.