மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று, இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா, மதுராபுரம் கிராமத்தில் வசித்து வந்த நல்லதம்பி செல்வராணி (வயது 57) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தாயான இவரின் சடலம், அவரது வளவிலுள்ள கிணற்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்தனர். குறித்த பெண்ணின் கணவர், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அலுவலகத்துக்கு இரவுக் காவல் கடமைக்காகச் சென்றுள்ளார். தாயை, இன்றுகாலை பிள்ளைகள் தேடியபோது தாய் கிணற்றினுள் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து, பிரிவு கிராம உத்தியோகத்தருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.