யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இன்றுகாலை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி உசா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் இன்றுகாலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.

ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்த்தன, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலுவதுவெல, திருமதி அலுவெதுவல, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி கொடகந்த, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், காரைநகர் பிரதேசசபை தவிசாளர் கேதீஸ்வரன், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், சமயப் பெரியார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.

விருந்தினர்கள், அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரின் உரைகளைத் தொடர்ந்து விழா மேடையில் வைத்து பயனாளிகள் பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதன்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சக்கர நாற்கலிகள், கற்றல் உபகரணங்கள், உதவித் தொகைகள், வீட்டு உபகரணங்கள், தொழில் ஊக்குவிப்பு உதவித் தொகைகள், கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு என பல உதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பதிவுத் திருமணம் ஒன்று இடம்பெற்று திருமணச் சான்றிதழும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன் சகல திணைக்களங்களும் ஒரு குடையின்கீழ் இணைந்து பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, இறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ், வாகன அனுமதிப்பத்திரம், காணிப் பிணக்குகள், இடர் முகாமைத்துவ சேவைகள், முதியோர் அடையாள அட்டை என பல சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார்கள். இதில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.