வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.

கடந்த 3ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த குறித்த விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த 3 வர்த்தகர்கள் என ஐவர் வந்திறங்கியதுடன், பின்னர் இவர்கள் குறித்த விமானத்திலேயே திருகோணமலையிலுள்ள சீன துறைமுகத்தின் இராணுவ முகாம் விமானப் பாதையில் தரையிறங்கியுள்ளனர். பின்னர் இந்த விமானம் நேற்று குறித்த முகாமிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு வரும் விமானமொன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனில் அனுமதிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திலிருந்து மாத்திரமே வெளியேற வேண்டும்.

குடிவரவு- குடியகல்வு சட்டத்திட்டத்துக்கு அமைய அனுமதியளிக்கப்பட்ட விமான நிலையம் அல்லாத வேறொரு இடத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து வெளியேற எந்தவொரு விமானத்துக்கும் அனுமதியளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், திருகோணமலையிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற குறித்த விமானம் தொடர்பில் விசாரணைகள் செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.