உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே பல மாதங்களாக படைகளைக் குவித்திருந்த ரஷ்யா  வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது.

இந்த மோதல்கள் உலக நாடுகளை பலவாரு சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில்,உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

 இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதன்படி பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும் வீட்டோ அதிகாரம் பெற்ற 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இப்போது வரைவுத் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் , ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படும்  சிறப்பு அதிகாரத்தை கொண்டுள்ளன.