உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து,  கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பிந்தைய செய்தி

புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும் என புகையிரத முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புகையிரத ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்தையவை

ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) மாலை கைவிடப்பட்டது.

கடமைகளுக்கு செல்வோருக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ரயில்வே திணைக்களம் எரிபொருளை விநியோகித்ததாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை 3 மணியளவில் ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரயில்வே ஊழியர்களின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று பகல் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இதுவரை விநியோகிக்கப்படவில்லை என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் கரும பீடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றுள்ளதால், பயணச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.