நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு மீள நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகள் இன்றைய தினம், கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தில் இருந்து நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொகை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 நடமாடும் அம்சமும் இதில் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
பிப்ரவரி 2022 முதல் இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா வசதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், புதிய வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் குடிவரவு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் அமைச்சர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து 300 முதல் 400 ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர்.