அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி இந்நாட்களில் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700  Bombardier விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், விமானப்படை தளபதி , கடற்படை தளபதி ஆகியோர் நேற்று இவர்களை வரவேற்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. புலனாய்வுத் தகவல்கள் மற்றும் உளவு செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் இந்த ஜெட் ரக விமானம் பல நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் 40,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும்.

14 மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடிய ஆற்றலை இந்த விமானம் கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கை விமானப்படைக்கு சுமார் 22 மில்லியன் டொலர் பெறுமதியான நவீன Beechcraft 360 ER ரக விமானத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கவுள்ளது.

N7700 Bombardier என்பது Beechcraft 360 ER வகை விமானத்தின் நடவடிக்கை கட்டமைப்பிற்கு  மிக நெருக்கமான விமானமாகும்.

இலங்கை விமானப்படையின் விமானிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு அதன் செயற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விமான நிலைமைகள் தொடர்பில் நடைமுறைப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை விமானப்படையிடம் கடல் மற்றும் தரைவழி ஆக்கிரமிப்பிற்காக இரண்டு Beech King Air 200 விமானங்கள் உள்ளதுடன், இந்த புதிய Beechcraft 360 ER விமானம் கிடைத்த பின்னர், நாட்டின் கடல் பாதுகாப்பு வலுப்பெறும்.

இந்த பயிற்சி தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மனிதாபிமான உதவி, இடர் நிவாரணம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றினூடாக  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாகவும் பாதுகாப்பான இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்காக முன்நிற்பதாகவும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.