பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன மற்றும் பாலித்தவுக்கு ஒரு வாரம் தடை-

dsdfdffநாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற களேபரத்துக்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மற்றும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை கூடிய சபையில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, நாளை முதல் ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் குறித்த இருவரும் ஈடுபட முடியாது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு-

gfjgஇலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் டிப்போவிற்கான கணக்காளர் அலுவலகம் ஒன்றை அமைத்துத் தருமாறு வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமக்கான கணக்காளர் அலுவலகம் வவுனியாவில் காணப்படுவதால், தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மன்னார் டிப்போ ஊழியர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில் இன்றுகாலை முதல் இடம்பெற்று வந்த மேற்படி பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டு மீண்டும் மதியம் 1.15 மணிமுதல் ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 12.45 மணிளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் உப்பாலி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, அறுவர் வைத்தியசாலையில் அனுமதி-

current shockயாழ். சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த் திருவிழாவின்போது மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்றுகாலை ஆரம்பமான நிலையில் கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை தண்ணீர்ப்பந்தலில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது எஸ் சொர்ணகுமார் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய அறுவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆயிரம் இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு-

Fஅமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கைத் தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு கடவுச்சீட்டு-

ranilஇந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும் நேரத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் ரணில், மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். பிரதமர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், ‘குழப்பங்கள் காரணமாக இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றிருப்போரை, நாட்டுக்குள் அழைத்துவருவதே, அரசாங்கத்தின் கொள்கையாகும். அவ்வாறு வருவோருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பிரச்சினைகள் இல்லை. இலங்கைக்குத் திரும்புவோருக்கு, பிரஜாவுரிமை வழங்கப்படும். இன்னும்சிலர், இரட்டைப் பிரஜாவுரிமையைக் கோரியிருக்கின்றனர். ‘பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவுச் சான்றிதழ் விவகாரங்களைக் கையாள்வதற்கு, இந்தியாவிலுள்ள இலங்கையின் துணைத் தூதுவர், உதவிப் பதிவாளராகச் செயற்படுகிறார்’ என்றார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ’22 வயதுக்குக் குறைந்த வயதுடையவர்களைப் பதிவதற்கு, 2003ஆம் ஆண்டு முதல், அடிப்படைக் கட்டணம் அறவிடப்படவில்லை. அத்துடன், நாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு, இரண்டு – நான்கு வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் கடவுச்சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.