மன்னார் படகு விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு-

மன்னார் சிலாபத்துறை கடலில் நேற்று முற்பகல் படகொன்று கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறு பிள்ளையொன்றும் அடங்குவதாக  கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். படகு கவிழ்ந்தமை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் மீட்புப் பணிகளை ஆரம்பித்திருந்ததாகவும், மாலம்பே பகுதியைச் சேர்ந்த சிலரே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகில் பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காணி அதிகாரம் குறித்து இந்தியா கோரவில்லை-

வட மாகாண சபைக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரும், அவ்வாறான கோரிக்கையை இந்திய முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நாளை இலங்கைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த ஊடகவியலாளர் நடா, ஊடகவியலாளர் ரவிவர்மா ஆகியோர் மரணம்-

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமாகியுள்ளார். ‘நடா’ என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் நான்கு தசாப்தகங்களாக பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை வீரகேசரியின் பிரதம ஆசிரியராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்ட ரவிவர்மாவும் காலமாகியுள்ளார். நீண்ட காலமாக தினக்குரல் பத்திரிகையில் கடமையாற்றிய இவர் கடந்த சில வருடங்களாக சுகயீனமுற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.