வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்-

வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி. விக்னேஸ்வரன், விக்னேஸ்வரன் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தாம் நல்லெண்ண நோக்கிலும், ஒற்றுமைக்காகவுமே இந்நிகழ்வில் பங்கேற்றதாகவும், ஆனாலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது பிழையானது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.