வலையிறவுப் பாலம் திறந்துவைப்பு-

மட்டக்களப்பு வலையிறவுப்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலத்தை உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் இன்றுமுற்பகல் திறந்துவைத்துள்ளனர். 108 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வலையிறவுப்பாலமானது படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதியமைச்சார் கருணா அவர்களை ஏன் அழைக்கவில்லை இது ஜனாதிபதியின் வேலையா? பிள்ளையானின் வேலையா? என அவரின் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகவேக நெடுஞ்சாலையில் சுமார் 20 சொகுசு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கான விசேட சொகுசு பஸ் சேவையும் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து இந்த சொகுசு பஸ் சேவையை பிரதி அமைசசர் சரத் குமார குணரட்ன ஆரம்பித்து வைத்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்பிற்கு ஏழு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நேற்றுமாலை 6 மணியிலிருந்து முதல் 6 மணித்தியாலங்களில் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் அரசாங்கம் 2.3 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புச் செயலர் இந்தியாவிற்கு விஜயம்-

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த வாரத்தில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் இந்திய அமைச்சர் வீ நாராணயசாமியை கோடிட்டு பிடிஐ செய்திசேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஏழு மில்லியன் ரூபா போலி நாணயத்தாள்கள் பறிமுதல்-

ஏழு மில்லியன் ரூபா, போலி நாணயத்தாள்கள் புத்தளம் மாவட்டம் மாதம்பே பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலியாக அச்சிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்; கூறியுள்ளார். இந்த போலி நாணயத்தாள்களின் தொடர் இலக்கம் டீ 677 991 59 என்றும், இதனால் இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலக்கம் குறிப்பிடப்பட்ட போலி இரண்டாயிரம் ரூபா நாணத்தாள்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் உடன் அதனை அருகிலுள்ள பொலிஸில் ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கைதிகளின் குடும்பங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய நடவடிக்கை-

சிறைக்கைதிகளின் குடும்பங்கள் தொடர்பான மீளாய்வு திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் அனைத்து சிறைக்கைதிகளினதும் குடும்பங்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே கூறியுள்ளார். கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளன. இந்த செயற்றிட்டத்திற்காக சமூக சீர்த்திருத்த திணைக்களத்தின் மூலம் பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதற்கும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

யாழ். வைத்தியசாலை தொண்டர்கள் பணி பகிஸ்கரிப்பு-

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்துவரும் சிற்றூழியர்கள் இன்றுகாலை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். சிற்றூழியர்கள் நியமனத்தின்போது தம்மை புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கு முன்பாக இன்றுகாலை 11.30 மணிவரை தொண்டர்களாக பணி புரியும் 199 பேர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் வைத்தியசாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுடனும் வைத்தியசாலை நிர்வாகத்துடனும் பேச்சுக்களை நடத்தியதைத் தொடர்ந்து தொண்டர்கள் தமது போராட்டத்தினை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு விஜயம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றையதினம் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவருமே இவ் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். நான்குநாள் விஜயம் மேற்கொள்ளும் தாங்கள் இருவரும் இன்றிரவு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்க தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள்-

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன்பிடித் துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பணிகளை 2015இல் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.