பொதுநலவாயத்தில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு-

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசின்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன. ஆனால், இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இப்போது இந்திய உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எச்சரிக்கை-

இலங்கை தொடர்பாக தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும்போது, தொடரூந்துகளில் ஏறி இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என மத்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் தகவல் அறிவிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரூந்துகளில் ஏறி போராட்டம் நடத்துவதால், மின்சார தாக்கம் மற்றும் தவறி விழும் அபாயம் போன்ற பாதிப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறு தொடரூந்துகளை மறித்து, அவற்றில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை தத்தெடுக்க 8000 பேர் தயார் நிலையில்-

குழந்தைகளை தத்தெடுப்பதற்கு எண்ணாயிரத்திற்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிடுகின்றது. மேல்மாகாணத்திற்கான பட்டியலில் மாத்திரம் 3000பேர் இருப்பதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் யமுனா பெரேரா கூறியுள்ளார். இதனைத்தவிர, 400க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு பதிவுசெய்துள்ளதாக அவர் கூறியுள்;ளார். குழந்தைகளை தத்தெடுப்பதற்கு தகுதியானவர்களா என்பது தொடர்பில் மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக ஆராய்ந்ததன் பின்னர் பெற்றோரற்ற குழந்தைகளை அவர்களுக்கு தத்துக் கொடுக்கவுள்ளதாக யமுனா பெரேரா குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு குழந்தைகளை தத்துக்கொடுத்தபின் அவர்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீமெந்து ஆலையில் குடியமர மாட்டோம்;-மயிலிட்டி மக்கள்-

மயிலிட்டி மக்களை யாழ். மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற கிராம சேவையாளர்களிடம் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வலி.வடக்கில் தமிழ் மக்களின் 6ஆயிரத்து 384 ஏக்கர் சொந்தக் காணிகள், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குள் உள்ளடங்கும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலிட்டி வடக்கு (ஜே-246) பலாலி விமானத்தளம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களை, கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் காங்சேன்துறை சிமெந்து ஆலைக்குச் சொந்தமான சிமெந்துக் காணியில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டி வடக்கில் மீளக் குடியமர்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், வேறிடத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைக்காக 60 பேர் வரையிலேயே பதிவு செய்துள்ளனர். தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் சிமெந்து ஆலைக் காணியில் மீளக்குடியமர மறுப்புத் தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.