ஊடகவியலாளர்கள் நடா, ரவிவர்மா ஆகியோரின் நினைவுக் கூட்டம்-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா (நடா) மற்றும் தினக்குரல் ஊடகவியலாளர் பரமகுட்டி மகேந்திரராஜா (ரவிவர்மன்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் இன்றுமாலை 6மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் அனந்த பாலகிட்டனர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அமரர் நடராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பாகவும், ரவிவர்மாவின் ஊடகப்பணி குறித்தும் உரையாற்றினார். இதனையடுத்து ஊடக ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகத்துறையினர் நடா மற்றும் ரவிவர்மன் ஆகியோரின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது சிவராஜா, தேவகௌரி, அன்னலட்சுமி ராஜதுரை ஆகியோரும் சட்டத்தரணி தர்மராஜ் அவர்களும் உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் நிக்சன் அவர்கள் நடா மற்றும் ரவிவர்மனின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றியதுடன், நன்றியுரையாற்றி நிகழ்வினை நிறைவுசெய்தார். இதன்போது அமரர் ரவிவர்மனின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நினைவுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேந்திரன் ஆகியோரும், வேலணை வேணியன் மற்றும் ஊடகத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.