Header image alt text

ஆரியகுளம் ஞானவைரவர் ஆலய விக்கிரகம் திருட்டு-

யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் பிள்ளையார் விக்கிரகம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்றுகாலை பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு சென்றிருந்த வேளையில் ஆலயத்தின் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகம் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினையடுத்து யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டேவிட் கெமரூன் இராஜதந்திர உறவுகளை மீறியதாக குற்றச்சாட்டு-

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் தமது இலங்கை விஜயத்தின்போது இராஜதந்திர உறவுகளை மீறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர் தமது விஜயத்தின்போது இராஜதந்திர முறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என இலங்கையின் மேலதிகாரி ஒருவரை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தமது இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாக கெமரூன் பிரித்தானிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே கெமரூன் இலங்கைக்கு வந்தபோது தேசிய விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட மறுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தமிழர் விடயத்தில் பொதுநலவாய மாநாட்டில் தலையிட கெமரூனுக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கைதிகளுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு-

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தேர்தல்களின்போது வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இந்திய உயர்நீதிமன்றத்தினால் நேற்று; வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்களிப்பு உரிமை மறுக்கப்படும் கைதிகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்னதாக சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளுக்கு தேர்தலில்களின்போது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தாதியர்கள் சேவைக்கு இணைப்பு-

இலங்கையில் முதற் தடவையாக தாதியர் சேவை பயிற்சிக்காக 6ஆயிரத்து 25பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். உயர்தர விஞ்ஞான பாடத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நடவடிக்கை அடுத்த மாதம் 17ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனிடையே, அன்று தொழில்சார் மருத்துவ சேவையை நிறைவுசெய்த 1,700 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமலை கைதிகளின் பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் ஆராய்வு-

திருகோணமலை சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை மற்றும் மறுசீரைமைப்பு பிரதி அமைச்சர் சந்திர சிறி முத்துகுமாரன இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கைதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே, அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார், திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ஜே.சீ.வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிரதி அமைச்சர் பதவி ஏற்தை முன்னிட்டு திருகோணமலைக்கு தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டு திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள 228 கைதிகளையும் சந்தித்துள்ளார். இதில் இந்திய மீனவர்கள் 31 பேரையும், 5 வருடங்களாக புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 13 கைதிகளையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளார்.

புதிய ஹெல்மட் அணியும் சட்டம் இடைநிறுத்தம்-

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசப் பாவனைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதிக விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். முழுமையான முகத்தை மறைக்கும் வரையிலான தலைக்கவசங்களை அணிபவர்களில் சிலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கின்றமையும், தலைக்கவசங்கள் கண்களை மறைப்பதால், வீதி தெளிவாக தென்படமையால் விபத்து இடம்பெறுவதாலும் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்-

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பொதுநலவாய செயலகத்தின் மனித உரிமை பிரிவின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் டிசம்பர் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக கூப்படுகிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே முதலில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார். தேசிய ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதையே பொதுநலவாயம் நம்புகின்றது என பிரதீபா மஹாநாம கூறியுள்ளார்.

மொழியை கற்பிக்கும் புதிய முறை அறிமுகம்-

மொழியை கற்பிக்கும் புதிய முறைமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மும்மொழி செயற்றிட்டத்தை நாடு முழுவதும் உரிய முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளதுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் சாதாரண பிரஜைகளுக்கு மொழிகளை கற்பிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேற்படி திறமையுள்ளவர்களுக்கு மொழியை கற்பிக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஆங்கில மொழியை கற்பிக்கும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டேவிட் கமரூனுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும்- அமைச்சர் வாசு-

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது என்ற உடன்பாடு பொதுநலவாய அமைப்பில் உள்ளது. எனினும் டேவிட் கமரூன் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்க்கின்றேன். இது குறித்து அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்காது விடின் தவறான முன்னுதாரணம் கொடுத்ததாக அது ஆகிவிடும். இருப்பினும் பிரித்தானிய பிரதமரின் கருத்துக்களை சிறிதாக எண்ணிவிடக் கூடாது. அது தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறையில் தமிழரின் பெயரில் வீதி திறந்துவைப்பு-

தென் மாகாணத்திலுள்ள வீதியொன்றுக்கு தமிழரொருவரின் பெயர் முதற் தடவையாக சூட்டப்பட்டுள்ளது. மாத்தறை நகரிலுள்ள வீதியொன்றுக்கே சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு தினம் மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டே மேற்படி வீதிக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பெயர் சூட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் இரு விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு-

நுவரெலியா, பீதுருதலாகல விமானப்படை முகாமில் சிப்பாய் ஒருவர் மற்றுமொரு சிப்பாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர் மற்றுமொரு படைவீரர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அதே துப்பாக்கியில் தன்னையும் சுட்டுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

wigneswaran_1654672gயாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது: Read more

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு தேவை-ஜூமா-

இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆபிரிக்கா கோரியுள்ளது. போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆபிரிக்கா தயாரகவுள்ளது என அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். தமது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களை சந்தித்துள்ளது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையை கையாண்டு பிரச்சினைகளை தீர்த்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே உயர் மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் ஜூமா கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு அனுமதி இல்லை-பாதுகாப்புச் செயலர்-

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை எனவும், அவ்வாறான நடவடிக்கை தொடர்பான கோரிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அந்நாட்டின் புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சர்வதேச விசாரணையைக் கோருவதாகவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் கன்சர்வேடிவ் மற்றும் ஜனநாயக கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்திற்கொண்டே அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கெமரூனின் இலங்கை விஜயமும் அதன் பின்னணியில் அமைந்ததே. போர்க் குற்றம் தொடர்பிலான கெமரூனின் எச்சரிக்கையானது இலங்கை இன்னமும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருப்பதைப் போன்ற நிலைமையை தோற்றுவித்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை-சர்வதேச மன்னிப்புச்சபை-

மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ள நாட்டில் பொதுநலவாய மாநாட்டினை நடாத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. எனவே இலங்கையில் யுத்தகாலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இந்த குற்றச்செயல்களுக்கு இதுவரை இலங்கை அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இவ்வாறு தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு நாட்டில் பொதுநலவாய மாநாட்டினை நடாத்தியது சிறந்ததல்ல என சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளரின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரௌசோ சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறை காட்டவேண்டுமானால் சர்வதேச சமூகம் இலங்கையின்மீது தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எனினும் சர்வதேசத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் அதிகரித்து இருக்கும்போது அங்கு பொதுநலவாய அமர்வை நடத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனினும் சர்வதேச சமூகம் இலங்கைமீது அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிக்கும்போது போர்க்குற்றம் உட்பட்ட பல விடயங்களுக்கு தீர்வு காணமுடியும் என ஸ்டீவ் க்ரௌசோ குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூனுக்கு கென்ய அமைச்சர் கண்டனம்-

எந்தவொரு நாடும் வெளிநாடுகளில் இருந்து தீர்வுகளையும், ஸ்திரத்தன்மையையும் இறக்குமதி செய்ய முடியாது என கென்ய வெளிவிவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அமினா மொகமட் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என வெளியிட்ட எச்சரிக்கை தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் ஒவ்வொன்றும் இறைமையுள்ள நாடுகளாகும் எனவே ஒரு நாட்டை மற்றும் ஒரு நாடு அச்சுறுத்தமுடியாது என்றும் கென்ய வெளியுறவு அமைச்சர் அமினா மொகமட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

பொதுநலவாய பணியிலிருந்த பொலிஸாருக்கு விடுமுறை-

பொதுநலவாய உச்சி மாநாட்டிற்காக விசேட பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 3 நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் 23 ஆவது பொதுநலவாய மாநாடு நடைபெற்ற காலத்தில் இவர்கள் ஆற்றிய விசேட பணிக்காக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசேட பணிகளில் 20 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுத் தலையீடுகளை ஐ.தே.க அனுமதிக்காது-சஜித் பிரேமதாச-

வெளிநாட்டுத் தலையீடுகளை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கப் போவதில்லை என கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையீடு செய்வதனை நாம் விரும்பவில்லை. அத்துடன் இந்த நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த படையினருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஆதரவளிக்க வேண்டும். மேலும் நாட்டில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எனினும் ஐ.தே.கட்சியின் தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்கு இலக்கானதனைத் தொடர்ந்தே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கட்சி பங்கேற்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வணக்கம்’ நீக்கப்பட்டது ஏன்? 

welcome_signபொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் ‘வணக்கம்’ என்ற பதத்தை நீக்கிவிட்டு ‘ஆயுபோவன்’ என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்து நழுவினார். 
பொது நலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான தமிழில் ‘வணக்கம்’ என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக ‘ஆயுபோவன்’ என்ற சிங்கள வார்த்தை தமிழில் ஒட்டப்பட்டுள்ளது. இது ஏன் என்று அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பதிலளித்த பின்னர் அநுர பிரியதர்ன யாப்பா அந்த ஊடகவியலாளரைப் பார்த்து ‘நீங்கள் வேண்டுமென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்’ என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப்படுவதற்கு உதாரணமாக பொதுநலவாய மாநாட்டில் தமிழில் வணக்கம் என்று எழுதப்படுவதற்குப் பதிலாக ஆய்போவன் என்று எழுதப்பட்டிருந்தது என்று கருதிய வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அரசாங்கம் இதற்கு பதில் அளிக்கத் தவறியுள்தாகவும் குறிப்பிட்டனர்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவு புதிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

n-1பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டுடன் நிறைவடைந்தது. 53 நாடுகள் அங்கம்வகிக்கும் பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் மாநாட்டை மிகக் கோலாகலமாக நடத்தியமைக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். Read more

சுழிபுரம் பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத் திறப்புவிழா-

unnamedயாழ். சுழிபுரம் பாரதி முன்னிலைப் பள்ளியின் கட்டிடத் திறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார்.  Read more

வவுனியாவில் தீப்பந்த போராட்டம்-

staged-a-candle-vigilகாணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் இன்று தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களை தேடும் உறவுகள் சங்கமும், பிரஜைகள் குழுவுமே இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர்.

சவேந்திர சில்வாவுடன் விவாதிக்க தயார்; கெலும் மக்ரே-

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தான் தயாராக உள்ளதாக சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே அறிவித்துள்ளார். அதன்படி சனல்4 ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கெலும் மெக்ரே தயாரித்துள்ள ஆவணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே சனல்4 ஆவணப்படம் ஒன்று நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள் உரையாற்றுமாறு ஐ.நாவிற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளாது இந்நிகழ்வுக்கு சவேந்திர சில்வாவே பொருத்தமானவர் என கோஹன குறிப்பிட்டிருந்தார்.

24ஆவது பொதுநலவாய மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானம்-

2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற 24 ஆவது பொதுநலவாய மாநாட்டை தென் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் நடத்துவதற்கு பொதுநலவாய தலைமை இன்று முடிவு செய்துள்ளது. அடுத்த மாநாடு மொரீசியஸில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் மொரீசியஸ் பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்ததுடன் அடுத்த மாநாட்டை தனது நாட்டில் நடத்தமாட்டேன் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்தே அடுத்த  மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு இலங்கை யானை பரிசளிப்பு-

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு துணையாக செயற்படும் நியூசிலாந்துக்கு இலங்கை யானை ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான நியூசிலாந்தின் நிலைப்பாட்டை இலங்கை பாராட்டியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புச் சின்னமாக இலங்கை அரசு நியூசிலாந்துக்கு யானையை வழங்கியுள்ளது.

அரச தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இந்த மாநாடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர். இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு இடையில் இன்று முற்பகல் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

300 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்;-குடிவரவு குடியகல்வு திணைக்களம்-

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட பலரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சம்பூரில் போராட்டம்-

திருகோணமலை சம்பூர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களது காணிகளை படையினர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்தும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இன்றையதினம் முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிவெட்டி நலன்புரி நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 9 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

வவுனியா-கொழும்பு பஸ்கள் மீது இன்றும் கல்வீச்சு-

வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ்கள் மூன்றாவது நாளாகவும் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள்மீது ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிசார் பஸ்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணம் தொடர்பில் இலங்கை ஆஸி இணக்கப்பாடு-

வடமாகாணம் தொடர்பில் இலங்கையுடன் மேலும் ஒரு இணக்;கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி எபட் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தாம் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏ.எப்.பி. இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் இது சம்பந்தமாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிசப் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து புறப்படும் அகதி படகுகளை, மீண்டும் திருப்பி அனுப்புவது தொடர்பான பாதுகாப்பு பரிமாற்ற நடவடிக்கையை மேலும் வலுவூட்டும் வகையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்-அமைச்சர் ரம்புக்வெல்ல-

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். செனல் 4 ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டு வரைமுறைகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இது எந்த அழுத்தங்களின் அடிப்படையிலும் இடம்பெறவில்லை. அதேநேரம் இந்த விசாரணைகள் எந்த வகையில் மேற்கொள்ளப்படும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொரிஷியலில் அரச தலைவர்கள் மாநாடு இடம்பெறாது-நவீன் சந்திர-

பொதுநலவாய அரச தலைவர்களது 2015ஆம் ஆண்டு மாநாடு மொரிஷியஸில் இடம்பெற மாட்டாது என மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்று கூறி மொரிஷியஸ் பிரதமர் மாநாட்டை புறக்கணித்தார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதனால் 2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிஷியஸ் இழந்துள்ளது. பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை அடுத்தமுறை நடத்தவுள்ள நாடு அதற்கு முன்னதாக நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை-

நான்காயிரம் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்பொருட்டு நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். நேர்முகப் பரீட்சையின் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் கிராம உத்தியோகத்தர்களை, வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளில் சேவைக்கு அமர்த்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தாரதர உயர்தர பரீட்சையின் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சர் டபிள்யூ டி.ஜே. செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.