தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கிழக்கை புறக்கணிக்கின்றது பா. அரியநேத்திரன்  மறுக்கின்றார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

tnaவடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பான அக்கறையும் அரசியல் செயற்பாடுகளும் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பா. அரியநேத்திரன் குற்றஞ்சாட்டுகின்றார்.
வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர், வடக்கு மாகாண சபைதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற தவறான மாயை உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்தப் போக்கு தூதிஷடவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய விடயங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றிருந்தது ஆனால் குறிப்பாக, வடக்கு முதலமைச்சர் தன்னை சந்திக்கும் ராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வட மாகாணத்தையே முதன்மை படுத்தி பேசுகின்றார். சில சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட வடக்கை முதன்மை படுத்தியே இத்தகைய சந்திப்புகளில் பேசியிருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தினால் காணி அபகரிப்புகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கான அனுமதி மறுப்பு போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. எனவே வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் பிரதிநிதிகளையும் கிழக்கு மாகாணத்திற்கும் அழைத்துவருவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக சம்பூர் பிரதேச மக்களின் முழுமையான மீள் குடியேற்றத்திற்கு இந்திய உதவியுடனான அனல் மின்நிலையமும் ஒரு தடையாக இருப்பதால், இந்திய அதிகாரிகள் இலங்கை வரும்போது அவர்களை கிழக்கு மாகாணத்திற்கும் அழைத்துவந்து மக்களின் அவல நிலையை காட்டவேண்டும் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை  தமிழோசையிடம் மறுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், இணைந்த வடக்கு கிழக்குடன் தீர்வு என்ற நிலைப்பாட்டையே சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவருவதாகக் கூறினார். வடக்கு மாகாண தேர்தலுக்குப் பின்னர், மாகாணசபை முதலமைச்சருக்கு முக்கியத்துவம் அளித்து சர்வதேச பிரதிநிதிகள் அவரை சந்தித்துவருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.