புலிகள்மீதான தடை நியாயமானது – இந்தியா-

Indiaஇந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளமையை நியாயப்படும் வகையிலான ஆவணங்களை இந்திய அரசாங்கம், இந்த தடை குறித்து ஆராயும் தீர்ப்பாயத்திடம் கையளித்துள்ளது. புலிகள் மீது இந்திய விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதி ஜீ.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த தீர்ப்பாயம் நேற்று சென்னையில் தமது அமர்வை நடத்தியிருந்தது. இதன்போது இந்தியாவின் பிரதி மன்றாடியார் நாயகம், புலிகள் தடை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் முன்வைத்தார். கடந்த 2012ம் ஆண்டு மூன்று புலி உறுப்பினர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டமை, இந்த தடை நீடிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் புலிகளின் சார்பில் வாதாடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். அதேநேரம் புலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இயக்கம் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியது. இதனை மறுத்துள்ள வை.கோ. புலிகள் இலங்கையில் தமிழீழத்தை கேட்டார்களே தவிர, இந்தியாவில் ஒரு அங்குலத்தையேனும் கேட்டிருக்கவில்லை என்று கூறினார். இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் சென்னையில் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி- ஆஸி. பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபையின் 69ஆவது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய விருத்திநிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கியுள்ளார். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கள்ளக்கடத்தலை எதிர்கொள்ள இலங்கை வழங்கிய உதவிக்கு மிக நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…

ஜனாதிபதி தலைமையில் பொதுநலவாய இடைக்கால மாநாடு-

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் தலைமையில் பொதுநலவாய நாடுகளின் இடைக்கால மாநாடு ஒன்று நேற்று நியுயோர்க்கில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் 69வது பொது சபைக் கூட்டத்துக்கு சமாந்தரமாக இந்த மாநாடு இடம்பெற்றது. இதன்போது அடுத்த ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அத்துடன் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை சீரமைக்க நடவடிக்கை-

இலங்கையின் தேர்தல் சட்டங்களை சீரமைப்பதற்கான யோசனை வரைவு ஒன்று தயாரிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தேர்தல்கள் ஆணையாளருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பில் நேற்றைய சந்திப்பின் போது முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி வீசாவுடன் சிக்கிய சிரிய பிரஜை-

போலி வீசா அனுமதிப்பத்திரத்துடன் சிரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணைத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர் கைதாகியுள்ளார். இவர் ஜேர்மன் நோக்கி பயணிக்கவிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.