வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் பெரியபுலோ மக்களுடன் சந்திப்பு-
யாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் கடந்த 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் பிரதேச பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. திரு.குமார்(சின்னக்குமார்) அவர்களின் தலைமையில் பெரியபுலோ அண்ணா சனசமூக முன்றலில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் அப்பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாhர்வையிட்டுள்ளார்.
வட்டுக்கேட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்சித்திட்டத்தின் கீழ் ஜேர்மனி வாழ் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டுப் பணிப்பாளர் திரு.பி.எல்.மோகணக்குமார் ஆசிரியர் தலைமை வகித்திருந்தார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கினார்கள்.
வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு-
யாழ். வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், மற்றும் புளொட் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் 30.10.2014 அன்று வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளனர். மேற்படி மயானமானது வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, பொண்ணாலை, மூளாய் மற்றும் சித்தங்கேணி பகுதி மக்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை இவ் மயானம் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்தமையும் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகும். இவ் நிலைமைககள் தொடர்பில் வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத் தந்ததனைத் தொடர்ந்து கௌரவ வடமாகாண சபை முதலமைச்சர் அவர்கள் தமது ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 7 லட்சமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா. ஓரு லட்சமும் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அவர்களது மாகாணசபை நிதியிலிருந்து ரூபா 50,000மும் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் வெகு விரைவில் இதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.
அராலி கிழக்கு ஐயனார் கோவில் புனரமைப்பு குறித்து மாகாணசபை உறுப்பினர் ஆராய்வு-
யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி கிழக்கு பகுதிக்கு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று விஜயம் மேற்கொண்ட புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அராலி கிழக்கு ஐயனார் கோவிலுக்கு சென்று நடைபெற்றுவரும் புனருத்தான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. சு.ஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்-
வட மாகாண சபை அனர்த்;தப் பாதிப்புக்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பதுளை கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 1500 பாதிக்கப்பட் மக்களுக்கான உடுபுடவைகள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர்களான திரு ந.பி.,ராஜ்குமார், திரு. ச.சபாநாயகம் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர், இவ் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டு மாவட்ட இளைஞர் கழகத்தின் சம்மேளன உப தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ச.லக்சன் அவர்களிடம் உடுபுடவைகளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் ஒப்படைத்தார். மேற்படி உடுபுடவைகள் நாளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொஸ்லாந்தை மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம்-
கொஸ்லாந்தை, மீரியபெத்த மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம் நேற்று 02.11.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை பூக்கர் மண்டபத்தில் மக்களுக்கான கலைஞர் அமைப்பின் சார்பில் கலைஞர் மொஹமெட் இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் புரவலர் கௌஷல்யா அம்மையார், கௌரவ ஏ.எச்.எம் அஸ்வர் பா உ, பேராசிரியர் சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனீஸ், பிரதி அமைச்சர் பிரபா கணேசன், பிரதி அமைச்சரின் செயலாளர் எச்.எச். விக்ரமசிங்க்ஹா, முஸ்லீம் பேரவை தலைவர் ஏ.என்.எம் அமீன், ஜ.தே.மு தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஆகியோர், ஆத்ம ஷாந்திக்கு மெழுகுவர்த்தி ஏற்றியதுடன், இரங்கல் உரையாற்றினர்.