இனவாத கருத்துக்களை வெளியிட்டால் இரண்டு வருட சிறை-

jail.......இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தத்தைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அந்த தவறை செய்பவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்-

un repஐ.நாவின் உதவி பொதுச்செயலாளர் ஹவுலியேங் ஷ_ இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஹவுலியேங் ஷ_ எதிர்வரும் 10ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஐ.நா அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த காலப்பகுதியில், புதிய அரசியல் சூழ்நிலையின்கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை அடையாளம் காண்பதற்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவுள்ளார். ஐநா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதன்போது, அந்த மாகாணங்களிலுள்ள அரச உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் ஹவுலியேங் ஷ_ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது-

fising (1)தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை வடமாகாண மீனவர்களின் பிரதிநிதிகளும், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சரும் கடந்த தினம் ஜனாதிபதியை சந்தித்து தமிழக மீனவர்களின் பிரசன்னம் குறித்து முறையிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இது குறித்த தமிழக மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இவ்விடயம் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளையும் பாதிக்கும் என அவர்கள் கூறியிருந்தனர்.

தலாய்லாமா இலங்கை வருவதற்கு சீனா எதிர்ப்பு-

talai lamaதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு வருவதற்கான விசாவினை வழங்குவது தொடர்பில் சீனா தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைத்தமைக்கும் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கை சீனாவின் கோரிக்கைக்கு இணங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.