Header image alt text

வவுனியா உமாமகேஸ்வரன் இல்லத்தில் புளொட் காரியாலயம் திறந்துவைப்பு-

ploteவவுனியா மாவட்ட புளொட் காரியாலயங்களில் ஒன்றான கோவில்குளம், உமா மகேஸ்வரன் வீதி, உமா மகேஸ்வரன் இல்லத்தில் அமைந்துள்ள அலுவலகம்

புனருத்தாபனம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 14.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி காரியாலயத்தினை திறந்து வைக்கவுள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியாக வரவேற்பு-

mangalaஇலங்கை நாட்டின் மீதுள்ள பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் என்பது தற்போது சர்வதேச நாடுகளுக்கிடையில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது என வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எமது நாட்டின் தலைமைத்துவத்தினை எற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தூர நோக்கத்தின் அடிப்படையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பல நாடுகளிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் ஊடாக மக்களுக்கான சிறந்த பணிகளை முன்னெடுப்பதற்கு வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டுள்ளது. இவ்வாண்டு தேசிய கீதம் தழிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்ட விடயம் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துக்காட்டக அமைந்துள்ளது என்றார். இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறை செயற்பாடுகளுக்கு மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்கான இணையத்தள அங்குராப்பண நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது-பிரதமர்-

ranilபோர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளக நீதிமன்றக் கட்டமைப்பிடமே ஒப்படைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குருவாயூரில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியா சென்றிருந்த நிலையில் அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின்போது பங்குபெறலாம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பான படையினர் மற்றும் புலிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றிய துல்லியமான விபரங்களை அறிந்து கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். உயிரிழப்புக்களுக்கு யார் காரணம், அவர்களுக்கான தண்டனை நிர்ணயம் என்பன குறித்த இறுதித் தீர்மானம் உள்ளக நீதிமன்றப் பொறிமுறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

இந்திய பொலிஸ் குழு இலங்கை வருகின்றது-

kidneyசிறுநீரக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இலங்கை வைத்தியர்கள் தொடர்பாக அடையாளம் காண்பதற்கு இந்தியாவின் ஹைதரபாத் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் அண்மையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த கடத்தல் சம்பவத்துடன் இலங்கை வைத்தியர்கள் குழுவொன்று நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறித்த வைத்தியர்கள் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவே இந்திய பொலிஸ் குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை சுகாதாரப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது சுகாதார அமைச்சரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு விடயத்திலும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை-அல் ஹ_சைன்-

Zeid Raad al-Husseinஇறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹ_ஸைன் கூறியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடைமுறையும் பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த நடவடிக்கைள் அனைத்தும் மிகவும் விரிவான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி-

governmentநாட்டில் சமூக சேவைக்கு ஆர்வம் காட்டுகின்ற சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி புத்தசாசன அமைச்சில் இந்த பதவி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய நியமனங்களை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள், நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சமூகத் தலைவர்களின் சேவைகளைக் கருத்திற்கொண்டு பிரதேச நீதிமன்ற அதிகாரப் பிரிவு, மாவட்டம் மற்றும் அகில இலங்கை என்ற ரீதியில் சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் கிடப்பில்-

postவிநியோகிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 150,000 கடிதங்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றுள் சுமார் ஒரு இலட்சம் சாதாரண கடிதங்களும் காணப்படுவதாக முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார். சுமார் 50,000 வெளிநாட்டுக் கடிதங்களும் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த கடிதங்களை விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான ஊழியர்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் இல்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் கூறினார். மத்திய தபால் பரிமாற்றத்திற்கு நாளாந்தம் சுமார் இரண்டு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையான பதிவுத் தபால்கள் வந்துசேர்வதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ், மத்திய தபால் பரிமாற்றத்தில் இரண்டாம் நிலை தபால் உத்தியோகத்தர்கள் 155 பேருக்கான வெற்றிடம் நிலவுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டினார். Read more

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய அடிக்கல் நாட்டும் வைபவம்-(படங்கள் இணைப்பு)-

16வவுனியா சாந்தசோலையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் ஆலய ஆஞ்சநேயருக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.02.2016) வெள்ளிக்கிழமை ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு எஸ்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு.காண்டீபன், கழக உறுப்பினர்களான எஸ்.சுகந்தன், ஜெ.கயூரன் ஆகியோருடன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், அயற்கிராம ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

இடமாற்றத்திற்கு எதிராக வவுனியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

rtrஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆசிரியரின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரே அதிகார துஸ்பிரயோகத்தை நிறுத்து, முறைகேடான இடமாற்றத்திற்கு முறையான தீர்வு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை மாணவர்கள் ஏந்தி இருந்தனர்.

குறித்த பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பிள்ளையும் கல்வி கற்கின்ற நிலையில் அந்தப் பிள்ளையை குறித்த ஆசிரியர் கண்டித்ததன் காரணமாகவே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர கட்சியின் ஏழு பேரின் உறுப்புரிமை இரத்து-

slfpஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் 07 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த 07 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இன்றுபகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக தனித்து செயற்படுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

தெற்கு அதிவேகப் பாதையில் வேன் தீப்பற்றியது-

highwayதெற்கு அதிவேகப் பதையில் வெலிப்பனையில் இருந்து கடவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று தீப்பற்றியுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் தெற்கு அதிவேகப் பதையின் வெலிப்பன மற்றும் தொடங்கொடைக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் 39வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் குறித்த வேன் தீப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர். குறித்த வேனில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதுடன் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கலாம்-

maithriஇலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. றுறுறு.ளுஊசுஆ.புழுஏ.டம என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் பல பாகங்களில் இருந்தும் மூன்று மொழிகளிலும் இலங்கை நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை இவ் இணைத்தளம் ஊடாக மக்கள் ஆலோசனைகளை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி அறிக்கைகள் எதிர்வரும் மேமாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, சிவில் அமைப்பினர்கள் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

newzealandநியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் க்ரஹம் மோர்டன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு-

granadeமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி கிராமத்தின் சூனையன்குடா எனும் இடத்தில் களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப் பகுதியில் உள்ள தொழிலாளி ஒருவர் களிமண்ணை கொத்தியபோது குறித்த கைகுண்டு களி மண்ணுக்குள் இருப்பதைக் கண்டுள்ளார்.

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் கைக்குண்டினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்-

jagathமுன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றுகாலை ஆஜராகியிருந்தார்.

இவரிடம் புத்தல பிரதேசத்தில் சுமார் 45 ஏக்கர் தனியார் நிலத்தில் தென்னை பயிரிடுவதற்கான கன்றுகள், தொழிலாளர் மற்றும் பிற வசதி தெங்கு பயிர்ச்செய்கை சபை மூலம் பெற்றுக் கொண்டது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நேற்றைய தினமும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவின் நியமனம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி-

human rights watchசரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம் என்கின்ற சமிஞ்சையையே வெளிப்படுத்துவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர், பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக் கூறல் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கைகளை அன்றி, தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து, இலங்கை மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அர்த்தமுள்ள வகையில் இலங்கை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்று அரசாங்கத்தின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் வகையில் பொன்சேகாவின் இந்த நியமனம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எல்லா இலங்கையர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய இந்தத் தருணத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொறுப்புக் கூறல் விடயத்தில் கவலையளிக்கும் வகையிலான சமிஞ்சையை வெளிப்படுத்தியுள்ளதாக பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்ட மாஅதிபராக ஜெனரல் ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம்-

solicitor generalபுதிய சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்றுகாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சட்ட மாஅதிபர் நியமனத்திற்கு மூவரது பெயர்கள் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து, அவர்களில் ஜயந்த ஜயசூரியவை புதிய சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான சுஹத கம்லத், ஜயந்த ஜயசூரிய மற்றும் கபில வைத்தியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த ஜயசூரிய, 1979ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்குள் பிரவேசித்து, 1981ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். 1983 ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து, 2011ஆம் ஆண்டு மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அங்குலானை பொலிஸ் வழக்கு மற்றும் சதீப லக் ஷான் வழக்கு போன்றவற்றின் அரச சட்டத்தரணியாக இவர் ஆஜராகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை-

missing personsகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட சாட்சி விசாரணைகளை யாழ் குடாநாட்டில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச குறிப்பிட்டுள்ளார். கோப்பாய், வலி வடக்கு மற்றும் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், யாழ் குடாநாட்டில் கடந்த அமர்வில் கலந்துக் கொள்ளாத மதுரங்கேனி பிரதேச மக்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார். குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைத்துள்ள 12,000 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கம்-

maththalaகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள், மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு திசைதிருப்பப்பட்டு, அங்கு தரையிறக்கப்பட்டுள்ளன.

துபாய், கட்டார் மற்றும் பீஜிங் ஆகிய விமான நிலையங்களிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த விமானங்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த 3 விமானங்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்ததாகவும், விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை, கட்டுநாயக்க பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாகவே, விமானங்கள் மத்தலைக்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவுக்கு இலங்கை கண்டனம்-

north koreaவடகொரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த 7ம் திகதி உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நெடுந்தூரம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யோசித்த ராஜபக்ச உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரோஹன வெலிவிட்ட உள்ளிட்ட ஐவர் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை, மீண்டும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை

எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் நீடிப்பு-

kothalawelaபினாஸ் அன்ட் கிரடிட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டார்களின் நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். அவர், இந்த வழக்கின் 8 ஆவது சந்தேகநபராவார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)

IMG_4582வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (08.02.2016) அதிபர் திருமதி எம்.எ.மோகன் அவர்களது தலைமையில் வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.என்.யு.என்.சுபசிங்க, மேக்சன் வங்கி முகாமையாளர் திரு ஆர்.சரவணன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு ல.யூட் பரதமாறன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான அனுசரனையை லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் வழங்கியிருந்தார். Read more

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயன்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரை-

jayanthaபுதிய சட்ட மா அதிபராக முன்னாள் சிரேஷ்ட சொலிசிஸ்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய சட்ட மா அதிபரை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்றுமாலை கூடியிருந்தது. இந்த கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டவியல் படிப்பை நிறைவு செய்தநிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 1983ம் ஆண்டில் இணைந்து கொண்ட ஜயன்த ஜயசூரிய 29ஆவது சட்ட மா அதிபராக பதவி ஏற்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 32 ஆண்டுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய ஜயன்த ஜயசூரிய தற்போதுவரை சிரேஷ்ட மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகின்றார். முன்னதாக கடமைநேர சட்ட மா அதிபராக சுகந்த கம்லத் நியமிக்கப்பட்டிருந்தார்

பொதுபலசேனா செயலர் ஞானசார தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

gnanasaraபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக, சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது. எதுஎவ்வாறு இருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை இன்றுவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பு-

karuநேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுதந்திரமான அணியாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, நேற்று பாராளுமன்றத்தினுள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்தப் பிரச்சினையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களது ஆர்ப்பாட்டத்தை பொருட்படுத்தாது சபை நடவடிக்கைகளை முறையே கொண்டு செல்லவும் அவர் தீர்மானித்தார். இந்நிலையில் நேற்று இரவு, தொலைபேசி ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என, யாரோ மிரட்டல் விடுத்ததாக, கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனினும் தான் அதனை பொருட்படுத்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்-

courtsபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டுமென சட்ட மாஅதிபர் திணைக்களம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அது தொடர்பான முடிவை தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

தாம் புனர்வாழ்வை எதிர்ப்பார்க்கவில்லை எனவும், முழுமையான விடுதலையே தமக்கு வேண்டுமெனவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 14 பேரும் தங்களின் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஜூன் மாதம் முதலாவம் திகதி வரை இது குறித்த விசாரணைகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு 31 மில்லியன் டொலர் ஒதுக்கும்-

Fஇலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிற்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை (210.49 கோடி ரூபா) ஒதுக்கும் யோசனையை அமெரிக்க அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பி வைத்துள்ள வரவுசெலவுத் திட்ட யோசனையிலேயே இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களிற்கு பின் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக ஜோன் கெரியின் வரவுசெலவுத் திட்ட யோசனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை வேண்டும்-சரத் பொன்சேகா எம்.பி-

fosekaசர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு எதிராக தற்போது பல குற்றச்சாட்டுக்களும், சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணைகள் அவசியம். எனவே, இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினருக்குக் கட்டளை பிறப்பித்தவன் என்ற வகையில் அந்த இராணுவத்தினரை குறித்த குற்றச்சாட்டக்களில் இருந்து மட்டுமல்லாது அவர்களுடைய கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. Read more

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு-

maithri UNநான்கு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராஅத் அல் ஹ_சைன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின்போது, சட்ட ஓழுங்கு பாதுகாப்பு, இலங்கையின் சமகால சவால்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்பவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹ_சைன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் செய்த் ராத் அல் ஹ_சைன் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு-

fdfdதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹ_சைனுக்குமிலான சந்திப்பொன்று இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் கூறுகையில், திருப்திகரமான ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் மற்றும் நாட்டிலுள்ள தேசிய பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களைப் பற்றியும் நாங்கள் பேசியிருக்கின்றோம், காணிகள் சம்பந்தமாகவும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும், காணாமற்போனோர் சம்பந்தமாகவும் அதேநேரத்தில் உண்மையான நல்லிணக்கம் விசுவாசமாக ஏற்படுவதாக இருந்தால், ஒரு நிரந்தரமான நியாயமாக அரசியல் தீர்வுக்கான அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம். மிகவும் திருப்திகரமான சந்திப்பு என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்.

அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 39ஆவது சிரார்த்த தினம்-

sfdfdfffffசட்ட மேதையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 39ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் மலர்மாலை அணிவித்ததுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஆதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறில் மற்றும் ஏனைய உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் மலர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்-

fosekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தனவின் ஆசனத்துக்கே பொன்சேகா தெரிவாகியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்தார். அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், பின்னர் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். மேலும் கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர், அண்மையில் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை பொன்சேகாவுக்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு விசாரணை அவசியமில்லையென தேரர்கள் கோரிக்கை-

ddfdfdfஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களின் மாநாயக்க தேரர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹ{சைனிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹ_சைன் இன்று முற்பகல் கண்டிக்கு விஜயம் செய்திருந்தார். கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவரை பஸ்நாயக்க நிலமே வரவேற்றார். பின்னர் இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்கர்களை சந்தித்து மனித உரிமைகள் ஆணையாளர் ஆசீகளைப் பெற்றுக்கொண்டார். தனது இலங்கைப் பயணத்தின் நோக்கம் குறித்தும் இதன்போது அவர் விவரித்தார்.

இராணுவத்தினரை பாதுகாக்கும் வேலைத்திட்டம், முதலில் மகிந்த கையெழுத்து-

ddfdfஇராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கு பத்து இலட்சம் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் இன்றையதினம் கொழும்பு சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கையெழுத்தினை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்ததாக கூறப்படுகின்றது. இதன்படி சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம். படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்களைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ச மகஜரில் கையொப்பமிட்டுள்ளார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபரை சிறை மாற்றுவதற்கு மறுப்பு-

tyyyபுங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களில் ஒருவரான பத்தாவது சந்தேகநபரை யாழ் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, இன்று பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்காமையால் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவி துஷ்பிரயோகம், ஆசிரியருக்கு பிணை வழங்ககூடாதென ஆர்ப்பாட்டம்-

ewrereமட்டக்களப்பு, கருவாங்கேணி பகுதியில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவருக்கு பிணை வழங்கக் கூடாது என வலியுறுத்தி இன்று முற்பகல் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஆசிரியர் மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சந்தேகநபருக்கு விடுதலை வழங்க கூடாது எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பட்டிருந்தனர்.