Header image alt text

“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன-

maithri‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஜனவரி 08ஆம் திகதி இத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சேவையினூடாக சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் இச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார். Read more

குற்றச் செயல்கள் அதிகரித்தபோதிலும் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை-

ruwan gunasekaraநாட்டில் குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இந்த குற்றச்செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்தார். எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் அண்மைக் காலங்களில் பாதாளக் குழுக்களிடையேயான மோதல்கள் காரணமாக மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி தென் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக தென் மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.சி.டி சொய்ஷா தெரிவித்துள்ளார். 9 மாகாண முதலமைச்சர்களும் சந்திக்கும் இந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டைகள் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் மாகாண நிர்வாகத்தில் குறிப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற ஆளுநரின் அநாவசியத் தலையீடுகள் பற்றி முழுமையான அறிக்கையொன்றைத் தயார் செய்திருப்பதாகவும், இது குறித்து ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவுகளில் ஆளுநரின் அநாவசியத் தலையீடு இடம்பெற்ற சந்தர்ப்பங்களையும் தாங்கள் ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாங்குளம் அம்பகாமம் பாடசாலை மாணவர்களுக்கு வட்டு. இந்து வாலிபர் சங்கம் அன்பளிப்பு-

vaddu hinduமாங்குளத்தைச் சேர்ந்த அம்பகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் உள்ளது. இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக காணபடுகின்றனர்

அந்த வகையில் பாடசாலை கழுத்துப்பட்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எல்லா மாணவர்களும் அணிந்து வருவதில்லை எனவும் அவற்றை பெற்றுக் கொள்வதற்க்கான பணவசதி தங்கள் மாணவர்களுக்கு இல்லை என்பதால் அவற்றை தமக்கு பெற்றுத் தருமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் பாடசாலை அதிபரினால் முன்வைக்கபட்ட விண்ணப்பத்தை தொடர்ந்து

சங்கத்தினால் 100 பட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இவ் கழுத்துப் பட்டிகளுக்கான நிதியினை அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிராகரித்த அரசியல் கைதிகள்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக தாம் இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்திருந்தபோது, அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தபோதும், அவர் அதனை நிறைவேற்றவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் இதன்போது தெரிவித்தனர் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததாக கூறினார்.

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-

 pillaiyanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் சார்பாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை ஆராய்ந்த பின்னர், சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியல் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்துப் பிரதிப் பிரதமர் -அமைச்சர் மங்கள சந்திப்பு-

dsffdஇலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமர் சோம்கிட் ஜதுஸ்ரீபிடக்கிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருநாடுகளினதும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதோடு, தொழிநுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறையில் இருநாட்டு கூட்டு நடவடிக்கை குறித்து இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அத்துடன், நாளைய தினம் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் இணைத் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலில் தாய்லாந்து பிரதிப் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதேவேளை, தாய்லாந்து பிரஜைகள் மத்தியில் பௌத்த மதம் சார் சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், பௌத்த பாரம்பரிய தலங்கள் அமைந்துள்ள களனி ரஜமஹா விஹாரை, கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு-

namalநிதி மோசடி தொடர்பான சட்ட வரையறைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டுப் பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவால் ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவால் சட்டவிரோதமாக பெறப்பட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமல் ராஜபக்ஷ தவிர்த்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஏழு பேரதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாணத்தில் பேரணிகள்-(படங்கள் இணைப்பு)

dsfddfசர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதிப் பேரணி ஒன்று இன்றுகாலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக இப்பேரணி ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை அடைந்து, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர். இதேவேளை பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை நிறுத்தக்கோரி வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினமான இன்று கிளிநொச்சியில் பெண்கள் கறுப்புப் பட்டிகளை கட்டியவாறு பேரணியில் ஈடுபட்டிருந்தனர். Read more

கடைகள் உடைப்பு இன ஒற்றுமையைக் குழப்பும் சதி-வியாழேந்திரன் எம்.பி-

vijalendran mpதமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி, நாசகார வேலை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில் நேற்றுமுன்தினம் அதிகாலை 6 கடைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடும்போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ஏறாவூர் நாலாம் குறிச்சிப் பிரதேசம் பூர்வீகமாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு எல்லைப் பகுதி. அப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தில் திட்டமிட்டு தமிழ் மக்களின் 6 கடைகள் ஒரே நேரத்தில் உடைத்து சேதமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நல்லாட்சி அரசு கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்தவிதமான சதிநாச வேலைகளில் ஒரு பிரிவினர் செயற்படுவதை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

Read more

மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு இடைநிறுத்தம்-

45646யாழ்ப்பாணம் வலி. வடக்கு சேந்தான்குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை கடற்படையினர் மற்றும் நில அளவையாளர்களின் அளவீடு செய்யும் முயற்சியானது மக்களின் கடும் எதிர்ப்பின் காரணத்தினால் இன்றையதினமும் இடைநிறுத்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தின்போது குறித்த நிலத்தினை சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மக்களின் கடும் எதிர்ப்பினால் காணி அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் குறித்த காணியினை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்தது. ஆனால் இம்முறையும் மக்களின் கடும் எதிர்ப்பால் நில அளவை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. அப்பகுதி காணி உரிமையாளர்களுடன், வலி, வடக்கு மீள்குடியேற்றக் குழுவினுடைய தலைவர் சஜீவன், மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் திரண்டு சென்று மேற்படி நில அளவீட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

15ஆவது நாளாக அரசியல் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம்-

welikada jailபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 15 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தம் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் மூவர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியதுடன் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை குறித்து தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளாhர்.

பாகிஸ்தான் ஜனாதிபதி, தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

hussainsfdd பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்மூன் ஹ_ஸைன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். தனது குறுகியகால இலங்கை விஜயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக் இன்றுமுற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவருடன் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் 20 பேர் வருகை தந்துள்ளனர். இதன்போது, இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரபு நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

rertஅரபு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மொஹம்மட் ஜமிலா, சவுதிஅரேபிய தூதுவர் ஏ.கே.ஏ.அல்முல்லா, குவைத் தூதுவர் கலாப் எம்.எம்.புடையிர், ஓமன் மற்றும் எகிப்து நாட்டு தூதுவர்களான மலிக் அல்சிக்னி மற்றும் எச்.எம்.மொஹம்மட் அஸ்ரம் ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்திருந்தனர். நேற்று யாழ் சென்றிருந்த இக்குழுவினர் யாழிலுள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ் முஸ்லிம் பிரதிநிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் தற்போதுவரை மீள்குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அக்குழுவினர் கேட்டறிந்ததுடன் வாழ்வாதார நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். மேலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அரபு நாடுகளின் தூதரகத்தில் முறையிட முடியும் என்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களை வடக்கிலுள்ள முஸ்லிம்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்கடத்தலைத் தடுக்க 12 நாடுகள் இணைந்த செயற்பாடு-

dsdசட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் 12 நாடுகள் இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளன. ஆசியாவின் ஊடாக இடம்பெற்று வரும் பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரிய குற்றச் செயல்களை தடுக்க இவ்வாறு 12 நாடுகள் இணைந்து செயற்பட உள்ளன. அவுஸ்திரேலியாவையும் இலங்கையையும் மையமாகக் கொண்டு இந்த நாடுகள் இயங்க உள்ளன. இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவு, தாய்லாந்து, பங்களாதேஷ், வியட்நாம், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இவ்வாறு இணைந்து செயற்படவுள்ளன. இந்த நாடுகளின் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் முறியடிக்கவும் முயற்சிக்க உள்ளனர். மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த நாடுகள் இணைந்து செயற்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கர்ப்பிணித் தாய்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது-

welikada prison roadகொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை சந்திக்கு அருபாமையில் வைத்து கர்ப்பிணித் தாய் ஒருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேநகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, மிதிகம, பிட்டதூவ வீதியில் சந்தேகநபரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் குறிப்பிட்டனர். வெலிகமை பகுதியைச் சேர்ந்த 26வயதான ஒருவரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவளித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்-

trytyசிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று யாழ். முனியப்பர் கோயிலுக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாடு செய்திருந்த இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர்கள் இமானுவல் ஆனோல்ட், ஆரியகுட்டி பரஞ்சோதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்டவர்கள் மடக்கிப்பிடிப்பு-

sassds6.94 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவரை யாழ்ப்பாணம், யாழ். மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தங்கத்தின் பெறுமதி சுமார் 34.5 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, மீனவர்களைப் போல் செயற்பட்டு, மீன்பிடி உபகரணங்களுடன் படகில் கொண்டுசெல்லப்பட்ட இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்கம் என்பவற்றை யாழ். சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக் கண்ணாடி பொருத்த நடவடிக்கை-

retrtrசிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதனாலேயே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அச்சுவேலி பத்தனையில் யுத்த பாதிப்புகள், விவசாயம் குறித்து ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

06.03.2016 achchuveli paththanai (6)வட மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் யாழ். அச்சுவேலி பத்தனைப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் வீதிகளையும், அப்பகுதி விவசாய நடவடிக்கைகளையும் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களுடன் திரு. சி.சிவகுமார் (மாகாணப் பணிப்பாளர், வடமாகாண விவசாயத் திணைக்களம்), திரு. கி.சிறீபாலசுந்தரம் (மாகாண உதவிப் பணிப்பாளர் வட மாகாண விவசாயத் திணைக்களம்) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

இதன்போது அப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் கிணறுகளையும், அப்பகுதி வெங்காயச் செய்கையினையும் நேரில் பார்வையிட்டதோடு, சேதன உரங்களைத் தயாரிக்கின்ற முறைகள் மற்றும் அவைகளைப் பயன்படுத்துகின்ற விதங்கள் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது விவசாயிகள் தங்கள் பகுதி வீதிகள் பாதிக்கப்பட்டு, கிணறுகள் பாழடைந்த நிலையில் இருப்பதை எடுத்துக் கூறினார்கள். இவ்விடயத்தில் கூடுதல் கவனமெடுத்து தங்களால் இயன்றளவுக்கு இப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் தெரிவித்தனர்.
Read more

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது-

welikada jailஉணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலைமை மோசமடைந்து வருவதாக, அவர்களை பார்வையிடச் சென்றிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்சம் தம்மை பிணையின் அடிப்படையிலேனும் விடுவிக்குமாறு கோரி, அரசியல் கைதிகள் கடந்த இரு வாரமாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக 14பேர் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் பெண்ணாவார். அதேநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றவர்களில் 3பேர் புனர்வாழ்வு பெற்று சமுகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களாவர். ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டவர். மேலும் இருவர் வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் சந்தித்த அரசியல் கைதிகள், தங்களுக்கு பலவந்தமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், சிலருக்கு சிறுநீருடன் ரத்தம் கசிவதாக தங்களிடம் கூறியதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் உண்ணாவிரதம்-

aarpattamதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, நாளை காலை 7மணிக்கு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் வளாகத்தில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக, மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

இதில் வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கொழும்பு வருகை-

sarvadesa nanaya nidiyamசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு வரவிருப்பதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக இந்த குழு கொழும்பு வரவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தின் நிலுவைக் கடன் 8,475 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 74.9 சதவீதம் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் குறிப்பாக 2006ஆம் ஆண்டுக்கு பின்னரான காலங்களில் கடன்கள் அதிகரித்துள்ளது என்றும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இந் நிலையில் புதிய அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான கடன் தேவைகளை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் ஆனாலும் புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அறிந்து நிலைமைகளை அவதானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வருவதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸி செல்ல முற்பட்ட 17 பேரும் காலி பொலிசாரிடம் ஒப்படைப்பு-

australia refugeesகாலி கலங்கரை விளக்கப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து புலனாய்வினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை-

minesகடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றும் பணிகள் நேற்று இடம்பெற்றது.

இந்தப் பணிகளில் 231வது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் மீன்பிடிப் படகுகள் தீக்கிரை-

gfgfதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் படகுகளின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்மபவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் சரத் பொன்சேகா தலதாமாளிகைக்கு விஜயம்-

fonseka ministerபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றையதினம் சனிக்கிழமை முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார். தலதா மாளிகைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பீல்ட் மார்ஷல் பொன்சேகா, மல்வத்துப்பீட மகாநாயக தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி செல்வா நகர் பெண்ணுக்கு வாழ்வாதார உதவி-

gகிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமி தமக்கு ஏற்கனவே வேள்ட்விசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான மாட்டுக் கொட்டகையை அமைத்துத் தருமாறும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கோரியிருந்தார்.

இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு. சு.ரவிராஐன் 20,000ரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தார். இவ் நல்லுள்ளம் கொண்ட ரவிராஐனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளார்.

எமது சங்கத்தின் ஊடாக ஏற்கனவே இவ் குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக கோழி வளர்ப்புக்கு என சுமார் 33,000ரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

வரலாறு பெற்ற மகளீர் போற்றப்பட வேண்டும்-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

mrs ainkaran (7)அனைத்துலக மகளிர் நாள் பங்குனி 8 என்பது மகளிரின் வெற்றி நாளாகவே கொள்ளப்பட வேண்டும். இவ் உலகில் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகட்கும் அச்சம் அழிக்கின்ற நாளாக இது அமைந்திட வேண்டும். இவ் நாளில் இவ் தரணிதனில் மாந்தர்கள் தமக்கு பெருமையையும் புகழினையும் அளிக்கின்ற நாளாக அமையட்டும். இன்று உலகின் பல்துறைசார் ஒழுங்கிலும் பெண்கள் தமக்கு தனித்துவமான நிலையினை உருவாக்கியுள்ளனர். இதற்கும் மேலாக எமது தாய் நிலத்தில் அடுப்பங்கரை மட்டுமே உரிமையாகிக் கிடந்த நிலைக்கு அப்பால் தரணியில் தமிழ் வென்றிட களமாடி உரமாகி தமிழ் பெண்களின் வீர வரலாற்றை இலக்கியங்களுக்கும் அப்பால் சென்று நிகழ்வுகளால் நிஜமாக்கிய மங்கையரின் வரலாறு பூசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறான வரலாறினை நிகழ்த்திய புனித மங்கையரைக் கொண்டிருந்த இவ் செந்நிலத்தில் அனைவரும் மங்கையரை இவ் திரு நன்நாளில் போற்றி அவர்களின் பெருமையினை பறைசாற்றிட வேண்டும். கடந்து விட்ட பல நாட்களில் நாம் பெற்றுவிட்ட வரலாற்றினை அழித்திட எதிரிகள் மட்டும் அல்ல துரோகிகளும் வஞ்சகர்களும் எமை சூழ்ந்து சூழ்ச்சிகள் பல செய்து ஏதிலிகளாக்க பல முயற்சிளும் பல கோணங்களில் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர். இவர்கட்கு இதுதான் தழிழ் பெண்ணின் வீரம் விளைந்திட்ட வரலாறு என காண்பிப்பதற்கு வெகுவிரைவில் காலம் மலர்ந்திட வழிபிறக்கும். சுட்டெரிக்கும் சூரியனின் அனல் காற்றாகி வெகுவிரைவில் பெண் கொடுமைக்கு விடை கிடைத்திடும்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலிமேற்கு பிரதேசசபை.

சூளைமேடு கொலை வழக்கு, வீடியோ மூலம் டக்ளஸ் எம்.பி சாட்சியம்-

douglas MPதமிழ்நாடு சூளைமேட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று சாட்சியமளித்தார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அவர் இன்று முற்பகல் சாட்சியமளித்தார். 1986ஆம் ஆண்டு சென்னையிலுள்ள சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக 1990ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதிவரை நீதிமன்றத்தில் ஆஜரான டக்ளஸ் தேவானந்தா பின்னர் ஆஜராகவில்லை. இதற்கமைய, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்றும் அறிவித்து சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்ததை அடுத்து, தலைமறைவு குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. Read more