தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன-வியாழேந்திரன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

2343434வடக்கு கிழக்குக்கு அப்பால் உள்ள தமிழர்களின் வரலாற்று அடையங்கள் அழிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வேல்முருகன் வர்த்தக நிறுவனத்தின் 40 ஆண்டுகால வர்த்தக நிறைவை பூர்த்தி செய்வதனை இட்டு வேல்முருகன் குடும்பத்தினரால் நேற்றுமாலை ஒளவையார் சிலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள வர்த்தக சங்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிலை திறப்பு விழா சிப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், பண்பாட்டின் அடையாளங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. 30 வருட யுத்தத்திற்கு முன்பு மட்டுமல்ல 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது. வடகிழக்குக்கு அப்பால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சோழர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதன் வரலாற்று சான்று பொலநறுவை. அங்கிருந்த சோழர்களின் கட்டிடங்கள், சிவாலயங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் காணாமல் செய்யப்பட்டு வருகின்றன. சிகிரியாவில் சித்தாண்டியை சேர்ந்த பெண் ஓவியத்தை சேதப்படுத்தியதாக கூறி 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைவிட எத்தனையோ மடங்கு வரலாற்று பொக்கிசமாக விளங்கும் பொலநறுவையில் உள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிசங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒளவையார் வாழ்ந்த காலப்பகுதியில் பல சமயங்கள் பல ஜாதிகள் வாழ்ந்தன. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவராக அவர் இருந்ததுடன், தனது இலக்கியத்தின் ஊடாக அதனை வெளிப்படுத்தினார். அந்த ஒளவையின் சிந்தனை இந்த நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மாறிமாறி இந்நாட்டை ஆட்சி செய்தவர்களிடம் இருந்திருந்தால் இந்நாட்டில் இலட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் நிலையேற்பட்டிருக்காது. இந்த நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்கள். வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயக தேசம். இந்த தேசத்தில் வாழும் சிறுபான்மை மக்களை நேசிக்கும் மக்களாக சிங்கள மக்கள் உள்ளனர். பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தினை விரும்பவில்லை. இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசியல் தலைவர்களும் இந்த நாட்டில் உள்ள சில மதத்தலைவர்களுமே இனவாதத்தை கிளப்பி இந்த நாட்டினை சீரழிவுக்கு கொண்டுசென்றுள்ளனர். இனவாதத்தை தூண்டி மதவாதத்தை தூண்டி அரசியல் நடத்தும் போக்கு இந்த நாட்டில் உள்ளது. 1994ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று கூறியிருந்தார். அப்போது இருந்த ஐக்கிய தேசிய கட்சி அவருக்கு எதிராக சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு இனவாதத்தை தூண்டினார்கள். சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்தார்கள். சந்திரிகா அம்மையாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர். மாபெரும் வெற்றியைப் பெற்று உலகின் முதலாவது பெண் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலில் போட்டியிட்டபோது இடைக்கால நிர்வாகத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வழங்குவதாக கூறியபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டியது. ஆனால் 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றிபெற்றார். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை. இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இதுவே ஒளவையின் சிந்தனை. இந்த சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

etrtrt 45656565656