யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி உயிரிழப்பு-

trainயாழ். – சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதுண்டு 18 வயது யுவதியொருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த யுவதி மோதுண்டுள்ளார். ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீதான இராணுவ கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது-

rrtrtrநீண்டகாலமாக இலங்கைமீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த இராணுவ வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 04ம் திகதி முதல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு வர்த்தக பிரிவினால் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இலங்கையுடன் இராணுவ உபகரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அமெரிக்கா இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. எனினும் மிதிவெடி அகற்றல், இடர் முகாமைத்துவ உதவிகள், வான் மற்றும் கடல் பாதுகாப்பு சேவைகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி-

eeweeeஇலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் 67 நாடுகள் பங்கேற்றிருந்தன. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அடுத்த மூன்று வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக நேற்றையதினம் இரவு நாடு திரும்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் சித்திரவதை தொடர்கிறது-ஐ.நா-

asdsdsdsdsஇலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்தும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்துள்ளார். எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவருடன், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோவும் வருகை தந்திருந்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் (தமிழர்கள் மீதான) சித்திரவதை கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும்கூட, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக இன்னும் சித்திரவதை தொடர்கிறது. மனித உரிமைகளை தூக்கிப் பிடிப்பதில், இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்த சாதகமான நடவடிக்கைகள், எங்களுக்கு (ஐ.நா.வுக்கு) ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. இலங்கையில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைகளில் நிலைமை, துயரம் அளிப்பதாக உள்ளது. வரலாற்றில் இலங்கை ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. சர்வதேச மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் எல்லாம் முழுமையாக சீரமைக்கப்படும் வகையில், எதிர்காலத்துக்கான வழியை ஏற்படுத்துவதில் எங்கள் சிபாரிசுகள் தொடரும் என கூறினார்.