இலங்கைக்கு தமது பூரண ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்கத் தயார் என சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரிவித்துள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஸியுவான் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து, சீன ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்த்துச் செய்தியினை கையளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, புது வருடத்திலும் இரு நாடுகளுக்கு இடையேயான பாரம்பரிய நட்புடனான உறவு தொடரும் என தெரிவித்துள்ளார் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்திலும், இரு நாடுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக செயற்பட பூரண ஒத்துழைப்பினை வழங்க சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன ஜனாதிபதியின் வாழ்த்தினை பெற்ற இலங்கை ஜனாதிபதி தனது வாழ்த்தினையும் அவருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், புது வருடத்திலும் தொடரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரையும் சீன தூதுவர் சந்தித்து சீன தலைவர்களின் வாழ்த்து செய்திகளை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.