பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும் அவற்றை  மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்து தெஹிவளை பிரதேசத்தில் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் கொழும்பில் தங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பல்வேறு வழிகளில் உதவியற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த மோசடி தொடர்பில் சமூக ஊடகங்களில் அண்மையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 30 சிசுக்களை குறித்த நபர் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேறு நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.