இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ஐ.எஸ் உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 702 இலங்கையர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது சம்சுதீன் அண்மையில் இந்திய அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

702 இலங்கையர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக அவரது வட்ஸ்அப் கணக்கில் தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குண்டுதாரியான சஹாரான் ஹாஷிமின் புகைப்படங்கள் மற்றும் உரைகளும் கணக்கில் காணப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த 702 பேரில் ஒருவரை ஏற்கெனவே கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் ஐ.எஸ் தொடர்புகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.