இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீண்டகால அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியுடன் இணைந்ததான இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.

உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் ஷிக்சின் சென், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கலாநிதி. உர்ஜித் பட்டேல், பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.