முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் இடம்பெற்ற அகழ்ப் பணிகளில் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து, இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள்  கண்டெடுக்கப்பட்டன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது, மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்டிருந்தன.

இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அந்த பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இதன்போது, முல்லைத்தீவு மேலதிக மாவட்ட நீதிபதி T. பிரதீபன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி , பொலிஸார் விசேட அதிரடிப்படையினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.