நீதிமன்றத்திற்கு வழங்கிய உறுதிமொழியை மீறியதாகத் தெரிவித்து முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பில் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) அறிவித்தல் பிறப்பித்தது.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜயதிலக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, நீதிபதி S.கீர்த்திரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இவர்களுக்கான அறிவித்தல்களை பிறப்பித்துள்ளது.

எவன்காட் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அதற்கு எதிராக தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவை தாக்கல் செய்ததாகவும் ஷானி அபேசேகர தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த எழுத்தாணை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை நிஷ்ஷங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கண்டுபிடிப்புகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை வௌியிடப்பட்டதாகவும் அதில் தமக்கு எதிரான சில பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை காரணமாக பிரதிவாதிகளான ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் நீதிமன்றத்தின் கட்டளைகளை தவறவிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஷானி அபேசேகர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.