பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை (07) முல்லைத்தீவு நீதவான் தொடர்பில்  சபையில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புடன் கவனயீர்ப்பு போராட்டங்களை  இன்று முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா கடந்த 4 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை சபையில் நீதவானை விமர்சிக்கும் வகையில் கருத்து வௌியிட்டிருந்தார்.
இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவும் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளிலிருந்து சட்டத்தரணிகள் விலகியிருந்தனர்.
யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகளும் வழக்குகளுக்காக ஆஜராவதை இன்று தவிர்த்துக்கொண்டனர்.
சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் இன்று ஸ்தம்பிதமடைந்திருந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற செயற்பாடுகளை இன்று பகிஷ்கரித்தனர்.
கல்முனையிலும் சட்டத்தரணிகள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.