வடக்கு ரயில் மார்க்கத்தில் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான பகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இன்று (13) காலை கொழும்பில் இருந்து புறப்பட்டுச்சென்ற யாழ். தேவி ரயிலில் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட உள்ளிட்டவர்கள் அனுராதபுரத்தை சென்றடைந்தனர். இதன்போது, அமைச்சரை யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
அண்மையில் கம்பஹா – தாரளுவயில் வெட்டி அகற்றப்பட்ட Crudia Zeylanica எனப்படும் மரக்கன்றும் இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ரயில் நிலைய வளாகத்தில் நாட்டப்பட்டது.
இதனையடுத்து, புனரமைக்கப்பட்ட ரயில் பதையூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி ரயில் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விசேட ரயில் பயணத்திற்காக M11 ரக என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
வவுனியா – ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைந்த விசேட ரயிலுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் இதன்போது கூறினார்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலும் ரயிலை வரவேற்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதிகளவிலானவர்கள் கூடியிருந்தனர்.
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.