இந்தியாவும் இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் உள்ள திருகோணமலை நகரை ஒரு பிராந்திய மையமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.
		    
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சண்முகராசா (அப்பையா) இராசமணி அவர்கள் இன்று (21.07.2023) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்தார். 12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.  
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை  சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.  நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளது. 
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று முற்பகல் சந்தித்துள்ளார்.  இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன்படிக்கைகளை  பரிமாறிக்கொண்டனர். 
மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிணங்க, பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷெஹான் சேமசிங்க, நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் அனூப பெஸ்குவல் பதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையுமென வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் Chongqing நகர சபையின் செயலாளராக Yuan Jiajun கடமையாற்றுகின்றார்.  சீன தூதுக் குழுவினர் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆகிய இரண்டு தினங்களிலும் இடம்பெற்றது.