ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட நிர்வாக்க் கூட்டம் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகள் பற்றியும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ராவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் குறித்த சந்திப்பில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியாவுடன் இணைந்து பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலி கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்காது. சர்வதேச நீதியினைக்கோரி நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.