1. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இருந்து இன்று பகல் 12.30 மணிமுதல் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைளுக்காக போதுமானளவு அதிகாரம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க செயலர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

2.  கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 5000 Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

3. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

4. பூநகரி – சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேச்சை குழு வேட்பாளர் யோ.பியதர்ஷன், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் (15) இரவு உயிரிழந்துள்ளார்.

5. இலங்கையில் கொரோனா மொத்த எண்ணிக்கை 2,687 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 8 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கி பழகியவர்கள். ஏனையவர்களில் கட்டாரில் இருந்து வருகைத்தந்த மூவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் அடங்குகின்றனர். இதுவரை 669 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2020.07.31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 31 திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக பதிவுத் தபாலின் மூலம் இலங்கை பரிட்சை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டபோது கொள்ளையர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொள்ளையடிக்க சென்ற 48 வயதுடைய மாவடிவேம்பைச் சேர்ந்த பரசுராமன் நவரட்ணம் என்பவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

8. இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றையதினம் மேலும் 5 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 2012 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 2,687 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

9. பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட் விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம், கல்வி அமைச்சு வினவியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.