மன்னார் சதொச மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியில் பங்குபற்றிய அனைத்து நிபுணர்களின் ஒட்டுமொத்த அறிக்கைகளையும் ஆய்வுகளையும் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை, தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை, தடயவியல் பொலிஸாரிடமுள்ள நிழற்படங்கள் மற்றும் அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் மொஹமட் சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு சார்பில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட சகல அரச தரப்பு நிபுணத்துவ அதிகாரிகளையும், அதன் பொறுப்பு வாய்ந்த அலுவலர்களையும் இன்று மன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கடந்த வழக்கு விசாரணையின் போது அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காகவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவுமே இந்த அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டது.

அதற்கமைய,  23 அரச திணைக்களங்களின் அதிகாரிகள், அரச தரப்பு சட்டத்தரணி , சட்ட வைத்திய அதிகாரி, காணாமலாக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தரணி, இராணுவ தரப்பு சட்ட ஆலோசகர் உள்ளிட்டோர் இன்று மன்றில் ஆஜராகினர்.

காணாமலாக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக  சட்டத்தரணிகளான V.S. நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தரணி, பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களுக்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி, அகழ்வுப் பணியில் பங்குபற்றிய அனைத்து நிபுணர்களின் அறிக்கையையும் ஆய்வுகளையும் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டது.

இதன் பின்னரே, புதைகுழி வழக்கு விசாரணையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் என நீதவான் மொஹமட் சாஜித் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கிணங்க, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.