தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நினைவு இல்லப் பொறுப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் (விசுபாரதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
34ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர்மாலை அணிவித்து, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்) அவர்களின் தலைமையில் அவரது உரையோடு, அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது.
இதன்போது தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனையடுத்து நினைவு இல்லப் பொறுப்பாளர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் செயலாளர், குருபரன், சிரேஸ்ட உபதலைவர் ராகவன், பொருளாளர் பவன், உபதலைவர் கேசவன், நிர்வாகப் பொறுப்பாளர் பற்றிக், ஊடகப் பொறுப்பாளர் தயாபரன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் புரூஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த தோழர் கவிஞர் மேளிக்குமரன், ஊர்ப் பெரியார்கள்,
எமது கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் வவுனியா – திருவருட்செல்வன் மன்னார் – சம யோகானந்தராசா, கிளிநொச்சி – சிவபாலசுப்பிரமணியம், முல்லைத்தீவு – தவராஜா மாஸ்டர், யாழ் – கஜதீபன், திருகோணமலை – மதியழகன்,
முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் – சிவம், யோகன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள்,
கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், மாவட்டங்களின் மகளிர் பிரதிநிதிகள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், மறைந்த தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.