இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று முற்பகல் சந்தித்துள்ளார்.  இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன்படிக்கைகளை  பரிமாறிக்கொண்டனர்.
சந்திப்பை அடுத்து, ஊடகங்கள் முன் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்த பாரத பிரதமர், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் எண்ணெய்க் குழாய் அமைப்பது குறித்து ஆராய்வதாகவும் கூறினார்.
இதேவேளை, நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தித் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
500 மில்லியன் டொலர் முதலீட்டில் மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்குற்கு Adani Green Energy நிறுவனத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.