Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கம் அன்னாரின் துணைவியார், மகன்மார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாருக்கு எமது அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம்.Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
மன்னார் படகு விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு-
மன்னார் சிலாபத்துறை கடலில் நேற்று முற்பகல் படகொன்று கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறு பிள்ளையொன்றும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். படகு கவிழ்ந்தமை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் மீட்புப் பணிகளை ஆரம்பித்திருந்ததாகவும், மாலம்பே பகுதியைச் சேர்ந்த சிலரே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகில் பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காணி அதிகாரம் குறித்து இந்தியா கோரவில்லை-
வட மாகாண சபைக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எந்த சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரும், அவ்வாறான கோரிக்கையை இந்திய முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நாளை இலங்கைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த ஊடகவியலாளர் நடா, ஊடகவியலாளர் ரவிவர்மா ஆகியோர் மரணம்-
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமாகியுள்ளார். ‘நடா’ என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் நான்கு தசாப்தகங்களாக பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை வீரகேசரியின் பிரதம ஆசிரியராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்ட ரவிவர்மாவும் காலமாகியுள்ளார். நீண்ட காலமாக தினக்குரல் பத்திரிகையில் கடமையாற்றிய இவர் கடந்த சில வருடங்களாக சுகயீனமுற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 6 October 2013
Posted in செய்திகள்
வட மாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் குறித்து புளொட் தலைவர் கருத்து-
வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வட மாகாணசபைக்கு தெரிவான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்பாக சத்தியப் பிரமாணம் எடுப்பது தவறு என கருதுகிறவர்களில் நாங்கள் உட்பட பலர் உள்ளனர். தமிழ் மக்கள் அரசுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இதன்படி அரசுக்கு எதிரான வாக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதென்பது தவறு என்ற அபிப்பிராயமே மிகப் பரவலாக இருக்கின்றது. ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும், ஆரம்பமே முறுகலுடனானதாக இருக்கக்கூடாது என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் எங்களுக்கு கூறியிருக்கின்றார். எனினும், இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் எமது கவலை என குறிப்பிட்டுள்ளார்.
கணக்கெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே மீட்பு-தேர்தல் ஆணையாளர்-
புத்தளம் புனித அன்ரூஸ் கல்லூரியில் கண்டெடுக்கப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கணக்கெடுக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நேற்றுமாலை அந்த வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை கணிப்பீடு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். இதன்போது வாக்குகள் மீள எண்ணப்படவில்லை என்றும், வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை மாத்திரமே கணிப்பிடப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து காணாமல்போன வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும், கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றமை இதன்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆயினும், அந்த வாக்குச் சீட்டுகளில் ஒருதொகுதி காணாமல் போயுள்ளன. அவற்றை பாடசாலை மாணவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இன்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த அவர்கள் நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் கூறியுள்ளார். கட்டார், மியன்மார், பிரான்ஸ், எகிப்து, ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சாம்பியா, லெசோத்தோ ஆகிய குடியரசுகளின் உயர்ஸ்தானிகர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சல்மான் குர்ஷித்த கூட்டமைப்பு சந்திப்பு-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வரும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று அவரை சந்திக்கவுள்ளது. சல்மான் குர்சித் எதிர்வரும் 7ம் திகதி இலங்கை வருகிறார். இந்த நிலையிலேயே அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை சந்திக்கவிருக்கிறது. சல்மான் குர்சித் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 07ஆம் 08ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருக்கும் சல்மான் குர்சித், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
Posted by plotenewseditor on 4 October 2013
Posted in செய்திகள்
சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத்துடன் கடவுச்சீட்டு விநியோகம்-
அடுத்த வருடத்திலிருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த வருடம்முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும். இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என சூலானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தில் சிக்கிய படகை மீட்க நடவடிக்கை-
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையேயான கடற்பரப்பில் அனர்த்திற்கு உள்ளான படகை மீட்பதற்காக கடற்படையின் சாகர கப்பல் நேற்றிரவு அனுப்பபட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தென்மேற்கு கடற்பரப்பின் 215 மைல் கல் தூரத்திற்கு அப்பால் ‘தினுஜ புதா’ என்ற இயந்திரப் படகு அனர்த்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 65பேர் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்ததாக கூறப்படும் இந்த இயந்திர படகில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி- இரா.சம்பந்தன் சந்திப்பு-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின்போது வடமாகாண அமைச்சரவை பதவியேற்பு தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
இலங்கை தொடர்பான காணொளிகளுக்கு தடை-
நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான மூன்று பெட்டக காணொளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செனல் போ தயாரித்த ‘த நோ பயர் சோன்’ மற்றும் தமிழ் இயக்குனர் ஒருவர் தயாரித்த ப்ரோக்கன் மற்றும் த ஸ்டோரி ஒப் வன் ஆகிய காணொளிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 3 October 2013
Posted in செய்திகள்
13 ஆவது திருத்தச் சட்டமே இந்தியாவின் விருப்பம்-கலாநிதி மன்மோகன்சிங்-
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு நன்கு தெரியும் என இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். விமானம்மூலம் நியூயோர்கில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டதுடன், திகதி ஒதுக்கீடு சிக்கல் காரணமாக இலங்கை ஜனாதிபதியுடனான நியூயோர்க் சந்திப்பு இடம்பெறாது போனதாகவும் கூறியுள்ளார்.
வடமேல், மத்திய மாகாண முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் இன்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவும், மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். வடமேல் மாகாண அமைச்சர்களாக சனத் நிஷாந்த, சந்திய சமந்தகுமார ராஜபக்ஸ, குணதாச தெஹிகம, தர்மசிறி பண்டார ஹேரத் ஆகியோரும் இதன்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அத்துடன் மத்திய மாகாண அமைச்சர்களாக பந்துல யாலேகம, ராமசாமி முத்தையா, எதிரிவீர வீரவர்தன, பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் என ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க விலகல்-
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டி குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார் .கடந்த தேர்தலில் கட்சி சந்தித்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, தாம் இந்த பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தோல்வியை கட்சியின் தலைவர்மீது மாத்திரம் சுமத்தாமல், இதனை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டாரா இல்லையா? என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை-அமைச்சர் பீரிஸ்-
இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார். த கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இலங்கைமீது சர்வதேச நாடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகவும், மேற்குலக நாடுகளும், தமிழ் பிரிவினைவாத அமைப்புகளின் தகவலை மாத்திரம் கொண்டு, இலங்கைமீது பாரபட்சம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அரசாங்கம் உரிய செயற்பாட்டை முன்வைக்க தவறினால், சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்திருந்தார். இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர், இலங்கை அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை எனவும், காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்கான ஆணைகுழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Posted by plotenewseditor on 2 October 2013
Posted in செய்திகள்
வட மாகாண முதலமைச்சருக்கு நியமனக் கடிதம்-
வடமாகாண முதலமைச்சர் நிலைக்கு தாம் நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் நேற்று முற்பகல் வடமாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தமது அலுவலகத்தில் வைத்து இந்த நியமனக் கடிதத்தை விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளித்துள்ளார்.
பாலித கோஹன தெரிவு–
ஐ.நா பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுச்சபையின் 68வது அமர்வின்போதே அவர் இந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர், ஆசியா மற்றும் பசுபிக் குழுவினரால் இந்த நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் பாலித கோஹன பொதுச்சபையின் 6வது குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலஙகையர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவிபிள்ளையின் காலக்கெடு முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ம் நாள், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும் கருத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது:- ‘ Read more
Posted by plotenewseditor on 2 October 2013
Posted in செய்திகள்
வடமாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பாத நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தபோது இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெகுமதி ஆசனங்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவி மற்றும் பதவியேற்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
போனஸ் ஆசனம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும், மற்றும் பதவியேற்பு தொடர்பிலும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவை இரண்டிற்;கும் நாட்கள் இருக்கின்ற படியால் மீண்டும் ஒரு தடவை கூடி இறுதி முடிவை எடுப்போம்’ என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிற்கான கூட்டம் யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றன. இக்கலந்துரையாடலில், அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலைக் காணப்பட்டதால் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுப் பதவிகளும் ஈ.பி.ஆர்.எல்எப்.க்கு 1 அமைச்சும் ரெலோவிற்கு 1 அமைச்சும் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முக்கிய அமைச்சான கல்வி மற்றும் சுகாதார அமைச்சு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரி வருவதால் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 2 October 2013
Posted in செய்திகள்
இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தனியான பொறிமுறையை ஏற்படுத்த போவதாகவும் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார். சில அரச நிறுவன அதிகாரிகள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தமக்கு விருப்பமான வேட்பாளர்களின் பயன்பாட்டுக்காக வழங்கியதாகவும் இக் கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு ஆணையாளர் கூறியுள்ளார்.
Posted by plotenewseditor on 1 October 2013
Posted in செய்திகள்
அரசாங்கத்திலுள்ள சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் அலட்டிக் கொள்வதில்லை-வாசுதேவ நாணயக்கார
அரசாங்கத்திலுள்ள சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் அலட்டிக் கொள்வதில்லை. அதனை வட மாகாண சபைத் தேர்தலை நடத்திக்காட்டியதன் மூலம் நிரூபித்துள்ளார் .
வெள்ளவத்தையையும், மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற வேண்டாமென்ற ஹெல உறுமயவின் கருத்து முட்டாள்தனமான இனக்குரோதத்தை ஏற்படுத்துவதாகுமென்றும் அமைச்சர் விமர்சித்தார்.
வடக்கில் குறிப்பிட்ட ஒரு சிலர் மத்தியில் ஆயுதம் ஏந்தும் சிந்தனை இருக்கலாம். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் அதிகாரம் உள்ள பிரதேசங்களிலும் அவர்களது கொள்கைகள் வலுப் பெற்றிருக்கலாம். ஆனால், வெள்ளவத்தை, மட்டக்குளி மற்றும் கொழும்பில் வாழும் தமிழ் மக்களிடையே ஆயுதம் ஏந்தும் சிந்தனை கிடையாது.
அவர்கள் அனைத்து இன, மத மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். எனவே, கூட்டமைப்பினரின் கொள்கை கொழும்பில் எடுபடாது. இவ்வாறானதொரு நிலையில் வெள்ளவத்தை, மட்டக்குளி பிரதேசங்களை நந்திக்கடலாக மாற்ற வேண்டாமென்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தானது இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் முட்டாள்தனமானதாகும்.
இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் கடும் போக்கு கருத்தாகும். ஆனால், அரசாங்கத்தில் பங்காளர்களாகவுள்ள இனவாதிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் ஜனாதிபதி கண்டுகொள்வதுமில்லை. அது தொடர்பில் அலட்டிக் கொள்வதும் இல்லை.
ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்வதென்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இதன் மூலம் வட மாகாணத்திலும் ஜனாதிபதியின் அதிகாரம் இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறான மாற்றம் வரவேற்புக்குரியது.
இதனையும் சிங்கள இனவாத சக்திகள் விமர்சிக்கின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக இனக்குரோதத்தை ஊக்குவிக்கின்றனர். இவையனைத்தும் சிங்கள மக்கள் மத்தியில் இழந்துபோன அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கான கபடத்தனமான நாடகமாகுமென்றார் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார .