காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6 மாதங்கள் விசாரணை-
காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதிவரை இவ் ஆணைக்குழு செயற்படவுள்ளது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்திருந்தார். இவ்ஆணைக்குழுவின் காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், இம் மாதம்வரை ஆணைக்குழுவின் காலத்தை ஜனாதிபதி நீடித்தார். இந்நிலையில் இந்த ஆணைக்குழுவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்நிலையில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
செப்டெம்பர் 20ல் ஊவா மாகாண சபைத் தேர்தல்-
ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். ஊவா மாகாண சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் நடைபெறவுள்ள திகதியை அறிவித்துள்ளார் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களில் இன்றும் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. ஊவா மாகாண சபைக்கு 32 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் செப்டெம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 9,42,730 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ராம் மாதவோ பாதுகாப்புச் செயலர் சந்திப்பு-
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவோ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படியான நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுக்கூட்டங்களில் அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை-
பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருதானையில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றின் போது, சில பௌத்த பிக்குகள் அத்துமீறி பிரவேசித்து குழப்பத்தை விளைவித்திருந்தனர். இது தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் ஒற்றுமையை சீர்குழைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள், இலங்கையின் ஒன்று கூடல் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை கோரியிருந்தது.
போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ் விசாரணைக் குழுவுக்கு தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2002 பெப்ரவரி 21ஆம் திகதிமுதல் 2011 நவம்பர் 15 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தகவல்களை வரும் அக்டோபர் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் தகவல்களை விசாரணைக்கு குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை அளிப்பவர்கள், தங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட தகவல்களை சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் அனுப்பலாம் என்றும், 10 பக்கங்களுக்கு அதிகம் இல்லாது அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தல்-
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 36பேர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஐ.நா சபையின் அகதிகள் பேரவை இவ் விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் கைதானோரை நாடுகடத்தும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. எனினும் இந்நடவடிக்கை குறித்து ஐ.நா சபை அகதிகள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவை மேற்கொள்ள தவறி விட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரஜைகள் 205 பேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் அகதிகளும் கைதுசெய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை கூறியுள்ளது.
சிங்கள மாணவர்கள் மத்தியில் பேசி நல்லுறவை நிலைநாட்டுவதாக அமைச்சர் வாசுதேவ கலாநிதி குமரகுரபரன் அவர்களிடம் உறுதியளிப்பு-
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் இந்த நாட்டில் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி பேசுவேன் நல்லுறவை நிலைநாட்டுவேன் என தன்னிடம் உறுதியளித்ததாக ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி குமரகுரபரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அப்பாவி தமிழ் சப்ரகமுவ பல்கலைக் கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புலி முத்திரை குத்த முனைய முயலும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்- அமைச்சர் வாசுதேவவிடம் குமரகுருபரன் கோரிக்கை.
புனர்வாழ்வு பெற்றவர்களும் க.பொ.த உயர்தரம் எழுதினார்கள் அவர்களும் பல்கலைக்கழகம் வந்தால் மீண்டும் புலி என் குற்றம் சுமத்தலாமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிச்சதாக அன்றோ இருக்கும். எதிர்கால நல்லெண்ணம் கருதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி உரையாடி சிங்கள தமிழ் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை புரிந்து கொண்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது – கலாநிதி குமரகுருபரன், தலைவர் ஜனநாயக தேசிய முன்னணி. Read more
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குடிமக்கள் ஏழு வருடங்களின் பின்னர், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய துணைப் பிரதமர் நிக் கிலெக் இதனைக் கூறியுள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களுள்ளன. இந்நிலையில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான குடியேற்றம் குறித்த முக்கிய விவாதம் ஒன்று நேற்று இடம்பெற்றது. அதில் பங்கேற்ற துணைப் பிரதமர் நிக் கிலெக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில்; ஏழு வருடங்கள் குடியிருந்த ஒருவர், ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறவோ அல்லது தொழில் புரியவோ முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் நிக் கிலெக் கூட்டணி அரசில் பங்குபெற்றுள்ள லிபரல் டெமோகிராட்ஸ் என்ற இளைய கட்சியின் தலைவராவார்.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சிரத்தையுடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ் தலைமையிலான குழு நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தது. இதன்போது இருநாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போதே சுஷ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக தெரிவித்ததாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மாலைதீவின் பொலிஸ் மா அதிபர் ஹூசைன் வைட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். பொலிஸ் மா அதிபர் என் கே இலங்ககோன், சட்டம் மற்றும் சமாதன தொடர்பான அமைச்சின் செயலாளர் மேஜர்ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோரின் அழைப்பின்பேரிலேயே அவர் இலங்கை வரவுள்ளார். மாலைதீவு பொலிஸ் மா அதிபரை வரவேற்றும் நிகழ்வு நாளை மறுதினம் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 30.07.2014 புதன்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்தவரும் நோர்வே நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் ஆலோசகரும், மனோதத்துவவியலாளரும், ஆசிரியையுமான அன்புமலர் இராஜசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு 50ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். மேற்படி கொடையாளர் இலங்கையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்றபோது நோர்வே நாட்டின் வாயிலாக பாதிக்கப்பட்ட அனைத்தின மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உதவித்திட்டம் வழங்குவது தொடர்பிலும் மேற்படி நிகழ்வின்போது ஆராயப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உடனடியாக வவுனியா பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு இருவேறு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பை மேற்கொண்டுள்ள சந்தே
இந்தியா – தமிழகம் திருச்சியில் உள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம்மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை கண்டித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரையை பார்த்த பின்னர் தற்கொலைக்கு முயன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் மாவட்ட பெண்கள் அமைப்பு உறுப்பினரான விஜயலட்சுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகலிடம் கோரும் பாகிஸ்தானியர்களை இலங்கை அரசாங்கம் சட்டவிரோதமான ரீதியில் நாடு கடத்துவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யூ.என்.எச்.சீ.ஆர்) சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்நடவடிக்கையை இலங்கை கைவிட வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் 9ம் திகதிமுதல் இலங்கையில் புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 214 பாகிஸ்தானியர்களை இலங்கை அதிகாரிகள் கைதுசெய்துள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்துவது தடைசெய்யப்பட்ட ஓர் விடயமாகும். பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் நாடு கடத்தக்கூடாது. சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை முதல், (01.08.2014) உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக ஆர்.எம்.ஆர்.டபிள்யூ. மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதித்திட்டமிடல் அமைச்சு இன்றையதினம் அறிவித்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ – குணுபொலகம பிரதேச வியாபாரியின் 04 வயது மகன் இன்று மீட்கப்பட்டுள்ளார். டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், “நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?” என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே அரசாங்க வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியிட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில், “தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்”
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்களும் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 50 சிறார்கள் உள்ளடங்களாக அனைத்து அகதிகளும் நேற்று இரவு அவர்கள் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த அகதிகள் அனைவரும் முன்னர் கர்டீன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தி வந்தபோதிலும், இதற்கு அகதிகள் இணங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் இரவு மூன்று விமானங்களின் மூலம் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் வண்டி கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.






இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன சேனவிரத்னே (65) டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். அப்போது, இலங்கைத் தூதராக நியமிக்கப்ட்டுள்ளதற்கான ஆணையை அவர் பிரணாப் முகர்ஜியிடம் முறைப்படி நேற்று அளித்துள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைத் தூதுவர் மட்டுமின்றி, இஸ்ரேல், உருகுவே, கானா, லாவோ ஆகிய நாடுகளின் தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் தங்கள் நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீது நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா டிப்போவுக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீதே புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 4ஆவது மைல்கல் பகுதியில் வைத்து மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி குடமுறுட்டி பாலத்தடியில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் வாகனம் குடை சாய்ந்ததில் வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரியில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் பூநகரி – பரந்தன் வீதி வழியாக வலயக் கல்விப் பணிமனைக்குத் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் பணிப்பாளர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, வெள்ள பாதுகாப்பு வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியக பிரதம இன்ஸ்பெக்டர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களை நேற்று கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை குற்றப்புலனாய்வுப் பணியக பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்களான இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆசிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில், ஆசிய வலயமைப்பை சேர்ந்த 33 நாடுகளின் அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.