யாழ். சுன்னாகத்தில் மின்நிறுவனத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தில் ஊறி கிணற்று நீருடன் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
இதனால் வலிகாமம் வடக்கு பகுதியின் பல பகுதிகளில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் கிணறுகளிலும் எண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உண்மை நிலையைக் கண்டறிந்துள்ள போதிலும், நொதெர்ன் பவர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன், வலிகாமம் பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஊர் மக்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, குறித்த பிரதேசத்தில் குடிநீருடன் எண்ணெய் கலப்பதற்கு தங்களின் மின்நிலையம் காரணமல்ல என்றும் நீதவான் தலைமையில் நடந்த சோதனை நடவடிக்கையின்போது, தங்களின் நிறுவனத்திலிருந்து எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் நொதெர்ன் பவர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா கூறியுள்ளார்.
வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்- சம்பந்தன்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் ததேகூ தலைவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.
மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் நடவடிக்கைகள் மாகாணசபையின் நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு தொடர்ந்து நிலவுவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்தும் பணியாற்றுவது சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தமை அரசியல் ரீதியான தவறு. உடனடியாக ஆட்சியை விட்டுக் கொடுத்தமை பாரிய தவறாகும்.
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது தெரிவித்ததாவது.
தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறியதாவது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு. அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சாதாரண ஓர் அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள தமது கட்சி விரும்பவில்லை. புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசியல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென விரும்பிய போதிலும் அவர்கள் அரசியலில் ஈடுபடவில்லை எனவும். ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவ்வாறானவர்கள் சுதந்திரமாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களை ஒன்றிணைத்து புதிய ஓர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். அவ்வாறான ஓர் கூட்டமைப்பை அமைத்துக்கொள்ள சாத்தியம் கிட்டாவிட்டால் ஜே.வி.பி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்யிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை காணப்பட்ட போதிலும், அவற்றை தேர்தல்களில் வாக்கு வங்கிகளாக மாற்றிக்கொள்ளவில்லை சுட்டிக்காட்டியதுடன். அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே வகிக்கிறார். ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஈ.பி.டி.பி கமல் கொலைக் குற்றச்சாட்டில் சிறை சென்றதால் பதவியிழந்ததை தொடர்ந்து, தவராஜா இந்தப்பதவிக்கு தேர்வானார். இப்பொழுது, ஈ.பி.டி.பி கட்சியிடமிருந்தே எதிர்க்கட்சி தலைமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எதிர்க்கட்சி தரப்பில் ஈ.பி.டி.பியில் இருவரும், சுதந்திரக்கட்சி தரப்பில் போட்டியிட்ட சிங்கள உறுப்பினர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூவரும் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குறிவைத்துள்ளது. அதற்கு ஆதரவளிக்க, சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களின் சத்தியக்கடதாசிகளுடன் எதிர்வரும் 16ம் திகதி தவிசாளரை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிவ்கான் தெரிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினர் மூன்று நாள் திருயாத்திரையை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர். அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பாரியார் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் மட்டத்திலானவர் வரவேற்றுள்ளனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறியரக விமானமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை வெளிக்கள ஒளிபரப் உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், 12.01.15திங்கட்கிழமை அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு மேற்படி நால்வருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கினிகத்ஹேன பிரதேச செயலாளர் காரியாலத்துக்கு சொந்தமான அம்பேகமுவ கேட்போர் கூட்டம் அமைந்துள்ள கட்டடத்தொகுதியிலுள்ள அறையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரக்கட்சியின் காரியாலயமே அம்பேகமுவ பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி பிரதான அமைப்பாளர் டப்ளியு.ஜி. ரணசிங்க, இந்த காரியாலயத்தை நடத்தி சென்றதுடன் தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்காக பெருந்தொகையான பொருட்கள் இந்த அறையில் இருந்ததாக பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார். அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம்; பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.