Header image alt text

மட்டக்களப்பில் கையெழுத்துப் பெறும் போராட்டம்-

eastஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிசக்கட்சி முன்னெடுத்துவருகின்றது. இன்று காலை 11.00 மணி முதல் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய், குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகையில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த, சமவுரிமை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது குமார் குணரெத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையினை பறிக்காதே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து அனுப்படும் பொருட்களை வீடுகளில் கையளிக்க ஏற்பாடு-

சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இம்முறையை மார்ச்மாத இறுதியிலிருந்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லக் ஸ்ரீ சோவா என்ற தனியார் நிறுவனத்தின ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள 6 நிறுவனங்களில் தற்போது லக் ஸ்ரீ சோவா நிறுவனத்திடம் மாத்திரமே ஸ்கேனிங் இயந்திரம் இருப்பதனால் இந்நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். பொதிகளை உடைக்காது ஸ்கேனிங் இயந்திரத்தின் உதவியுடன் சோதனைக்குட்படுத்தி அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இச்சேவைக்காக உரிமையாளர்கள் எவ்வித் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பொதிகளை அனுப்புபவர் கண்டணத்தை செலுத்துவதால் பெற்றுக்கொள்பவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா-

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம்திகதி தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.

குமார் குணரத்னத்திற்கு குடிவரவு திணைக்களம் அழைப்பு-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாடுகடத்தும் உத்தரவு ஆவணத்தை அவரிடமே கையளிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குமார் குணரத்னம் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருக்க குமார் குணரத்னத்திற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருமாறு குமார் குணரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை நிராகரிப்பாராயின் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு பொறிமுறை ஆபத்தானது – குணதாஸ அமரசேகர-

உள்நாட்டு பொறிமுறை நாட்டுக்கு மேலும் ஆபத்தானது என்று, தேசிய அமைப்புக்களின் ஒன்றிய இணைப்பாளர் குணதாஸ அமரசேகர கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விசாரணைகள் குறித்து கேள்விகளை எழுப்ப முடியாது என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும். உள்நாட்டு விசாரணைகளுக்கு அவ்வாறு செய்யமுடியாது. அத்துடன் இது உள்நாட்டு விசாரணை என கூறப்படுகிறபோதும், அவர்களுக்கு தேவையான வகையிலேயே இந்த விசாரணை இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸியில் இலங்கை அகதிகள் துன்புறுத்தல்-

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமான பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டு பணியாளராக பணியாற்றிய ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பி.பி.சீ ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றவர்கள் இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்த முகாமில் இலங்கை, ஈரான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ள நிலையில் அவர்களை அங்குள்ள அதிகாரிகளால் நாளாந்தம் நிந்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். இனரீதியாக தூசித்தல், துன்புறுத்தப்படுதல், முறையாக பேணப்படாமை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு அகதிகளை ஆளாகின்றனர். அத்துடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாமையால், பல நோய்களுக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் குறித்த மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு-

புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த ரிட்மனு இன்று பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து தாம் இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், குமரன் பத்மநாதன் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தம் புரிவதற்காக புலிகள் இயக்கத்திற்கு தமது கப்பல்கள்மூலம் குமரன் பத்மநாதன் ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். கே.பீ. மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக அறியக்கிடைக்கின்ற போதிலும், அவ்வாறான குற்றவாளி ஒருவர் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட பின் இந்த மனுமீதான விசாரணை பெப்ரவரி 26ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. கே.பி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 26ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மூளாய் வைத்தியசாலை நிலைமைகள் ஆராய்வு,  நோயாளர்காவு இருசக்கரவண்டி அன்பளிப்பு-

mulai mulai1யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இவர்களை வரவேற்றதோடு வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது வைத்தியசாலையை அழகுபடுத்தும் பொருட்டு வைத்திய சாலையின் முன் பகுதியில் சிறு பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பிலான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர் இவ் விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் இவ் ஆண்டுக்கு முன்னதாக மேற்படி திட்டம் நிறைவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர் இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) அவர்கள் அவ் நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளிகளை காவிச் செல்லும் இருசக்கரவண்டி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 35பேர் கைது-

boodமாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்றுகாலை கைதுசெய்துள்ளது. சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புதுகுடியிருப்பு, கரைதுறைப்பற்று வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை-

புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று வாக்காளர்கள் பெப்.21 வரை தற்காலிக அடையாள அட்டைகளை பெற முடியும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோர், தங்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை முல்லைத்தீவு தேர்தல் செயலகத்தில் பெறமுடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கோயிலுக்குச் சென்றவரைக் காணவில்லையென முறைப்பாடு-

sivaயாழில் சிவராத்திரிக்கு ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என, அவரது மனைவி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ். வடமராட்சி கொற்றாவத்தையை சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்பவரே காணாமல் போயுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பொலிகண்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் பொலிகண்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமல் போனவரின் துவிச்சக்கர வண்டி, அவருடைய பேர்ஸ் என்பவற்றை இன்றுகாலை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர

இலங்கை – இந்திய அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு-

maithri modiஇலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்த விழிப்பு குறித்து தான் விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

குமார் குணரத்னத்தின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னை கைதுசெய்து நாடு கடத்துவதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்தபோது குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இன்று குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குமார் குணரத்னம் சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை நீக்கத்தை அடுத்து குமார் குணரத்னம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை-

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய சம்பவத்தில் பாலித தெவரப்பெரும கைதுசெய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய உறவு தொடர்பில் சீனா மகிழ்ச்சி-

sri &indiaஇலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புதிய உறவு மகிழ்ச்சி தருவதாக சீனாஅறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் {ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை – சீனா இடையே நட்பு, நல்லுறவு காணப்படுவதாகவும் சீனாவை பொறுத்தமட்டில் இலங்கையும் இந்தியாவும் முக்கிய அயல் நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை நாடு திரும்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும். இந்திய விஜயத்தின்போது ஞாயிறு மாலை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வளாகத்தில் வைக்கப்பட்டு அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு; புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை பிற்பகல இடம்பெற்றது. அதே நாளில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை புதுடில்லியில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் கல்லறைக்கும் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு, இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் திங்கட்கிழமை நடைபெற்றிருந்தது. அங்கு சென்ற ஜனாதிபதியையும் இலங்கை தூதுக்குழுவையும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் வரவேற்றார்கள். பின்னர் இந்திய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில், சினேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை -இந்தியாவுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் மேற்கொண்டனர். இதன்போது, பொருளாதாரம், சக்தி, மீன்பிடி மற்றும் கலாச்சார உறவுகள் ஆகிய துறையில் நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதியுடன் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோன் ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர்.

வடமாகாண சபை உறுப்பினர் கனகசுந்தர சுவாமி காலமானார்-

kandasamyதமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று மாலை காலமானார். புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

வட்டகொட தமிழ் மகாவித்தியாலயத்திற்கு புளொட் ஜெர்மன் கிளை உதவி- 

நுவரெலியா வட்டகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கு கடந்த 11.02.2015 அன்று புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் அமைப்பின் ஜேர்மன்கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாக மேற்படி புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. சமூக சேவையாளர் திரு. கெங்காதரன் அவர்கள் வட்டகொட தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு பி. பாஸ்கரன் அவர்களிடம் கையளித்துள்ளார்.

திருமலையில் காணாமற் போனார் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு-

kanamalகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு அடுத்த மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்திலும், 3ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் அமர்வு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குச்சவெளி பிரதேச செயலக அமர்வில், கோபாலபுரம், இக்பால் நகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரிய குளம் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்குப்பற்ற முடியும். திருகோணமலை மாவட்ட செயலக அமர்வில் சாம்பல் தீவு, சீனக்குடா, செல்வநாயகபுரம், சிவபுரி, தில்லை நகர், உவர்மலை ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தவர்களிடம் அன்றைய தினம் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளதுடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஐ.நாவின் தாமதம் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது-மன்னிப்புச் சபை-

amnesty internationalaஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_சைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இம்முடிவு இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியவலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் கூறியுள்ளார். சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு-

north east chief ministersவட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ­மட்டும் விரைவில் சந்­திக்­க­வுள்­ளனர். கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பெற்­றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளு­ட­னான நேற்­றைய சந்­திப்பில் இதனை உறு­திப்­ப­டுத்­தியுள்ளார். அவர் மேலும் கூறு­கையில், தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் நீண்­ட­கால உறவு காணப்­ப­டு­கின்­றது. அதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்மை இனத்தை சேர்ந்­த­வர்­களே முத­ல­மைச்­சர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். இரு சமூ­கத்­திற்கும் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் ஒற்­று­மைப்­பாட்­டுடன் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வதே அவ­சி­ய­மா­னது. ஆகவே அவை தொடர்­பா­கவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ரம்புக்பொத்தவை புதிய இராணுவத்தளபதியாக நியமிக்க ஏற்பாடு-

புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் ரம்புக்பொத்த நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் இராணுவத்துக்குள் பிரதான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மேஜர் ஜெனரல்கள் 15பேரும் பிரிகேடியர்கள் மூவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று 16ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதை அடிப்படையாக கொண்டே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது கட்டாயவிடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இராணுவத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சொகுசு ஜனாதிபதி மாளிகைகள், ஹோட்டல்களாக மாற்றப்படும்: பிரதமர்-

கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கைது-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – இந்தியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்-

maithri modiஇந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என டெல்லியில் இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்றுமாலை டெல்லி சென்றார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக் கொண்டார். பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேன தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்தியாவுக்கும் – இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னே எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது. இந்தப் பயணத்தின்மூலம் இந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்” என்றார். முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா – இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது. இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக எதிர்வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா – இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும். விரைவில், இந்தியா – இலங்கை வர்த்தக செயலர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம்” என்றார். இதேவேளை, நாளை 17ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடவுள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் கோரி அதிகஸ்ட கஸ்ட பிரதேச ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-

aasiriyarkal poraattam aasiriyarkal porattam (2) aasiriyarkal porattamஅதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம்-

president visit to indiaஇந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்-

kanamat ponor thodarpil  (1) kanamat ponor thodarpil  (2)திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்-

northern_provincial_council1வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்-

காணாமல் போனோரை தேடித் தருமாறு கோரி மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. காந்தி பூங்கா சதுக்கத்தில் காலை 8.30அளவில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காணாமல் போனோரை கண்டறியும் குழுவுடன் பிராந்திய மகளீர் அமைப்புகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் தங்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கோரிக்கை மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்திய படகுகளை தடுத்துநிறுத்தக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்-

india boatsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மார்ச்சில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பையடுத்தே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

P1000376P1000381அண்மையில் வட்டுக்கோட்டை முதலிகோவிலடிப் பகுதியில் அமைந்துள்ள அம்பாள் சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி, ஐங்கரன் அவர்கள் குறித்த சன சமூக நிலையததவரின் கோரிக்கைக்கு அமைய அக்கிராம பாடசாலை மாணவர்கட்கு ஜேர்மன் நாட்டின் செல்வதுரை. ஜெகன்நாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படு வரும் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதே சபை உறுப்பினர் கொளரவ.சசிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.