Header image alt text

பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்-

stststபாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் யாழ். மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலை மாணவர்களை நேற்று (19.03.2015) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களுடனும், வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடியும் உள்ளனர். இதேவேளை மேற்படி ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும், இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்;யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்ததைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்-

elalai mayilankaduயாழ் மயிலங்காடு ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும் இதனுடன் தொடர்புடைய விசமிகளைக் கைது செய்யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனப் பேரணியானது மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் ஆரம்பமாகி சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரத்தை அடைந்தது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி. பிரகாஸ் எதிர்க்கட்சி உறுப்பினர் அரிகரன் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் கஜேந்திரன் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த செந்திவேல் தமிழ் அழகன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், மாணவர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்ய வேண்டும். இந்த செயலானது பாடசாலைப் பிள்ளைகளுக்கெதிரான ஒரு மிகப்பெரிய தீய செயலாகும். எனவே விசமிகளை உடனடியாக கைதுசெய்வதற்கு முழுமையான நடவடி;கை எடுக்க வேண்டும் என கோசமெழுப்பியதுடன், நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுப்பிடி போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கி இருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.

சொந்த நிலத்தைப் பார்வையிடச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்-

fffffffffஉயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து சென்றிருந்தனர். ஆனால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட குறிப்பிட்ட பிரதேசத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான பிரதேசம் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரால் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்றைய தினம் தோலகட்டி, வடமுனை, தென்முனை மற்றும் ஒட்டகப்புலம் எனும் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒட்டகப்புலத்தில் ஒரு பகுதியே மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது, ஏனைய பிரதேசம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமது சொந்த நிலங்களை 25 வருடத்திற்கு பின்னர் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்-

aarpattamமட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடந்த 5 நாட்களுக்காக உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக தமக்கு வேதனம் தரப்படவில்லை என்று தெரிவித்து சுமார் 150 நிரந்தர பணியாளர்களும் 70 தற்காலிக பணியாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதியன்று தமக்குரிய வேதனம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் இதனையடுத்து 31 ஆம் திகதியன்று அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் தமக்கு வேதனம் வழங்கப்படும்வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்

ஜனாதிபதிக்கு வியட்நாம் அழைப்பு-

presidentஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. வியட்நாம் தூதுவர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி, சுற்றுலா மற்றும் சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. மேலும் இதன்போது வியட்நாம் அரசாங்கத்தால் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையரை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு தடை-

britishஇலங்கைத்தமிழர் ஒருவரை நாடுகடத்தும் திட்டத்தை பிரித்தானிய நீதிமன்றம் இறுதி நேரத்தில் தடை செய்துள்ளது. பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. 36வயதான கண்ணன் காளிமுத்து என்பவர் புலிகளில் காவற்துறை அதிகாரியாக செயற்பட்டதாகவும், இலங்கையில் அச்சுறுத்தலை சந்தித்ததை அடுத்து அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமது நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பிரித்தானியாவில் இரு தடவைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள கோன்ப்ரூக் அகதி முகாமில் அதி உச்ச கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் நாடு கடத்தப்படவிருந்தார். எனினும் அவரின் மனநிலை கருதி அவரை நாடுகடத்தக் கூடாது என அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில், இங்கிலாந்தின் நீதிமன்றம் அவரது நாடு கடத்தல்; திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நவுறுதீவில் அகதிகள் ஆர்ப்பாட்டம்-

Australia-asylum-newஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறுதீவின் அகதி முகாமில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த முகாமின் அதிகாரிகள், நவுறுதீவின் குடிமக்கள் மற்றும் அகதிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஒன்று உருவாகி இருந்தது. இதன்போது அகதிகள் சிலர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் சிலர் கடும் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காணாமற் போனோர் ஆணைக்குழுவின் அம்பாறை அமர்வு-

missingகாணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 6ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார். சாட்சி விசாரணைகள் நடைபெறவுள்ள நான்கு நாட்களிலும் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் வீதம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். இதனை முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை சந்தித்து ஆணைக்குழுவின் அமர்வுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா  நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள் இணைப்பு)

Nelukkulam04வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா வலயக் கல்விப் பணிமனை பொறியியலாளர் திரு.கு.சிவகுமாரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகரசபை உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஆரம்ப கல்வி  ஆசிரிய ஆலோசகர் திருமதி.எம்.தேவசேனா, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ப.தர்மலிங்கம் அவர்களும் பாடசாலை மாணவர்கள், ஆசரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி தொடர்ந்து  மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. Read more