கருணாரத்ன பரணவிதாரன பிரதியமைச்சராக பதவியேற்பு-
பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கருணாரத்ன பரணவிதாரன உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகிறார். பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். இன்றுகாலை 9 மணியளவில் அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காகவே கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை முன்னாள் கடற்படை அதிகாரிகள் நால்வரும் ஆணைக்குழு முன் இன்று ஆஜராகியுள்ளனர்.
கடற்படை வாகனம் மோதி மாணவி மரணம்-
கடற்படையினர் கெப் ரக வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேலணை பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் (வயது10) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இம் மாணவி வேலணை நடராஜா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி கற்று வருகின்றார். இன்றுகாலை படசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தவேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவிமீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லும்போது மாணவி உயிரிழந்துள்ளார். மாணவி மீது மோதிய கடற்படைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் இராமநாதன் சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலணை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாஜூதீனின் மரணம்; படுகொலை என விசாரணை அறிக்கை-
பிரபல றகர் வீரர் மொஹமட் வசீம் தாஜூதீனின் மரணம், விபத்தொன்றினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் அவருடைய இறுதியான மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கை, நீதிமன்றத்தில் நேற்று கையளிக்கப்பட்டது. குறித்த சம்பவம் இடம்பெற்றபோது தாஜூதீனின், அந்த வாகனத்தை செலுத்தவில்லை என்றும் கொலைச்செய்யப்பட்டன் பின்னர் அவருடைய சடலம், அந்த காரின் சாரதி ஆசனத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. தாஜூதீனின் கழுத்து, பாதங்கள் மற்றும் நெஞ்சு ஆகிய இடங்களில் கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டிய பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி கைது-
கொழும்பு, நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்து அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுகதபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எம்.ஜீ.யூ.டி குணதிலக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு சாதாரண பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டார். இதன்பின்னர் பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.ஜீ. பிரசன்ன நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எம்.ஜீ.யூ.டி குணதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இராணுவவீரர் தற்கொலை-
வவுனியா, மஹகச்சிகொடிய, 83வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரமொன்றில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதுடைய சிலாபம், குமாரஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை காங்கேசன்துறையில் 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று படையினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்பவர் காது அறுபட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.