காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்-
காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள்? என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புலிகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறியவர்கள்-மங்கள-
தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மாறாக அவர்கள் வன்முறைகளிலேயே ஈடுபட்டிருந்தனர். பொதுநலவாய நாடுகள் மத்தியில் காணப்படுகின்ற இனவாதம், வன்முறையுடன் கூடிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் என்பவற்றை தடுப்பதற்கு, பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கின்றது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தத்திகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானியா நிதியுதவி-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மோல்ட்டாவில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் கெம்ரன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலே நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த நிதி பிரித்தானியாவால் வழங்கப்படவுள்ளது. யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சார்பில் நிற்பதற்கு பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நிதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பிற்கு முதலாவது பெண் செயலாளர் நியமனம்-
மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ரயில் மிதிபலகையில் பயணிக்கத் தடை-
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தடைவிதித்துள்ளது. ரயில்வே கட்டளைச் சட்டத்தின் கீழ், மிதிபலகையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது-
நீர்கொழும்பு கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் இன்று அதிகாலை 2 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது. இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த கோபுரம்; புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்களால் 2503 பேர் உயிரிழப்பு-
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 2503 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் 2326 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற 2037 வாகன விபத்துகளில் 2193 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகிய மரணங்களை விட இந்த வருடத்தில் 310 மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த வருடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார். ஆயினும் கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து அதிக வேகம் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, வாகன விபத்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐந்து நாட்கள் விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அமைதிப்படையில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படலாம் எனவும் நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது என்றார்.