Posted by plotenewseditor on 19 November 2015
Posted in செய்திகள்
புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்-
இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரியாணி விஜயசேகர அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான தூதுவராக கருணாசேன கொடிதுவக்கும், இத்தாலிக்கான தூதுவராக டீ.எஸ்.எல்.பெல்பொல ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தோனேஷியாவுக்கான உயர்ஸ்தானிகராக தர்ஷன பெரேராவும், ஜோர்தான் தூதுவராக ஏ.எல்.எம்.லபீரும், மியன்மார் தூதுவராக கே.டப்ளியூ.எம்.டீ.கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சவுதி அரேபியத் தூதுவராக ஏ.எம்.தஷீமும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராக சுனில் டீ சில்வாவும், சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்னவும், துருக்கிக்கான தூதுவராக சீ.எம்.அன்சாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான தூதுவராக எஸ்.ஜே.மொஹைடீன் தேர்தவு செய்யப்பட்டுள்ளதோடு பலஸ்தீன் தூதுவராக எம்.எஸ்.அன்வர் தெரிவாகியுள்ளார்.
வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் இராஜினாமா-
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, அவரது இடத்துக்குப் பதிலாக அகிலதாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்து பதவி விலகச் சொன்னதாகக் கூறி, அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர். அங்கஜன் விளக்கம் கோரியுள்ளதுடன் அகிலதாசின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்-
தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இராவண பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு குறிப்பாணை ஒன்றை கையளித்துள்ளது. இதில் இராவண பலய அமைப்பினரும் இது தொடர்பாக செயற்படும் 100க்கும் அதிகமாக தேரர்களும் கூடியிருந்தனர். அரசியல் கைதிகளை விடுவித்தால் நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகக்கூடும் என இதில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொது செயளாலர் வண. இத்னேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசராக சித்திரசிறியை நியமிக்க அனுமதி-
உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சபை இன்றுகாலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த கே.டி.சித்திரசிறி உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி கிடைத்துள்ளது.