அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களை நேற்று அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்ய கைதிகள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மேலும் எட்டு அரசியல் கைதிகளை நேற்று பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக 31 பேருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 39 அரசியல் கைதிகளுக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு-
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. மேலும் இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க மனித உரிமையை பாதுகாக்க நீதியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமை வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபித்தமை அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கும் மதிப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது, அத்துடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமது ஒன்றிய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
சோபித தேரரின் மரணம் குறித்த கருத்து, பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு-
மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக பேராசிரியர் காலோ பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலை தலைவர் வைத்தியர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். இதன்படி 500 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றுகாலை குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். வைத்தியசாலையில் வழக்கமாக நோய்க் கிருமிகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதற்காக விஷேட வைத்திய நிபுணர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று உள்ளதாகவும் நெவில் பிரணாந்து இங்கு மேலும் தெரிவித்துள்ளார். மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் உடலில் விஷக் கிருமிகள் இருந்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என அவர் கூறியுள்ளார். தேரருக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டவேளை வைத்தியர்கள் பரிந்துரைத்த சிகிச்சைகளை மட்டுமே வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மழையால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு-
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிட்டுள்ளார். இன்று மழையுடனான காலநிலை சற்று குறைவடையாலம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 21,000 ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் மழை ஓய்வடைந்துள்ள போதிலும் மக்கள் தொடரந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் வெள்ள நீர் தற்போது படிப்படியாக வடிந்தோடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல் தொடர்பான 2அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் 2 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டார். இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு பேதங்களும் இன்றி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செலுத்த வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் கடமையாகும் என்றார்.
ரயில் நிலையங்களுக்கு புதிய உறுப்பினர்கள்-
ரயில் நிலையங்களில் கடமையாற்றுவதற்கு 61 புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ரயில் ஓட்டுநர்கள் 31 பேர் மற்றும் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 30 பேர் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நான்கு வருடங்கள் பயிற்சி கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில் ஓட்டுநர்கள் 120 பேர் பற்றாக்குறையாகவுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்கரவாத தடைச் சட்ட நீக்கத்திற்கு ஒத்துழைப்பு-தீப்பிக்கா உடகம-
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் தீவிரவாதத்தை முறியடிக்க ஏதுவாக அமைய வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதவுரிமைகள் ஆணைக்குழு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும். அத்துடன் பாதுகாப்பு சட்டங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பதோடு பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றார் அவர்.