Header image alt text

முல்லைத்தீவு வசந்தபுரத்தில் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

image_7முல்லைத்தீவு மன்னகண்டல் வசந்தபுரத்தில் வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (04.11.2015) காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் வன்னி மேம்பாட்டுக் கழக முக்கியஸ்தர்களினால் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு நல்லினக் கறவை மாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறு ஆறு குடும்பங்களுக்கு ஆறு கறவை மாடுகள் காப்புறுதியுடன் வழங்கிவைக்கப்பட்டன. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் தோழர் மாசிலாமணி மகேந்திரராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் திரு. தவராஜா, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளர் செல்வி ராஜலட்சுமி, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் மத்தியகுழு உறுப்பினர்கள், கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை சங்கத் தலைவர் மற்றும் காப்புறுதி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இதன்போது வசந்தபுரத்திலுள்ள ஆரம்ப பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. மேற்படி வசந்தபுரம் கிராமம் 1977ம் ஆண்டு கலவரத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும். Read more

30 இலட்சம் பேருக்கு உறுதிபத்திரங்கள்-பிரதமர்-

ranil10 வருடங்கள் அரச உரிமை வீடுகளில் வசிக்கும் 30 லட்சம் பேருக்கு அவற்றின் நிரந்தர உறுதித்பத்திரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இடைக்கால கொள்கை பிரகடன விஷேட உரையை இன்று நாடாளுமன்றில் நிகழ்த்திய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஓய்வூதிய நலன்புரி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நூல்கள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 13ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டடத்தையும் நவீன கேட்போர் கூடத்தையும் திறந்துவைப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்புக்கு சமூகமளிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி வி.வினோபா இந்திரன் தெரிவித்தார் இந்நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதீப் மாஸ்டர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

prasanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மாலைதீவில் கைது-

arrestஇலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இவர் கைதாகியுள்ளார் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹபீஹாட்டு தீவிலிருந்து இவ்ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் மாலைதீவு அதிகாரிகள் இவர் கைதுசெய்யப்பட்டதை உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லையென தெரியவருகிறது.

புற்றுநோய்க்கு எதிராக மட்டக்களப்பில் வீதி ஊர்வலம்-

Captureபாதுகாப்பான சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இன்றுகாலை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை பகுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் மற்றும் மாவட்ட விவசாய திணைக்களம் இணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியை நடத்தினர். புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உள்ள மாவட்டம் என மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மரக்கறிகளுக்கு பாவிக்கப்படும் இரசாயண பதார்த்தங்களின் தாக்கங்கள் காரணமாகவே அதிகளவில் இந்த புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதாக அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. சேதனைப்பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதை வலியுறுத்தியும், இரசாயணங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இந்த பேரணியின்போது விழிப்புணர்வூட்டப்பட்டது. அத்துடன் குடும்பத்தினை நோயற்ற குடும்பமாக கட்டியெழுப்பும் வகையில் வீட்டுதோட்ட செய்கை தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது. மட்டக்களப்பு, ஆயித்தியமலை, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இருந்து பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பேரணியல் கலந்துகொண்டோர் நச்சு பதார்த்தங்களினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலான பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஊர்வலத்தினை தொடர்ந்து களுதாவளை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 4ஆயிரம் ஏக்கரை இராணுவம் சுவீகரிக்க முயற்சி-

imagesஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இராணுவத்தாலும் அரசாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்தும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் சுமார் நாலாயிரம் ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மன்னார் சன்னார் பிரதேசத்தில் இந்த சுவீகரிப்பு முயற்சி இடம்பெற்று வருகிறது. குறித்த பகுதிகளுக்குள் மக்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கோயில்குளம் சவேரியார்புரம்குளம் என்பனவும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த பகுதிகளை சட்டரீதியாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் காணிகளை நில அளவையாளர்கள் அளவிட உள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட அரச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்தில் இலங்கை அரசும் படையினரும் பல்லாயிரக்கணக்கான காணிகளை சுவீகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.