மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு-
பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி சமய கிரியைகளில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த மக்களை நினைவு கூறி இன்றுகாலை 7மணியளவில் லிந்துலை சென்றெகுலரஸ் தோட்டத்தில் நினைவஞ்சலி கூட்டமொன்றும் இடம்பெற்றது. அத்துடன் தோட்ட ஆலயத்தில் விஷேட ஆத்மசாந்தி பூசையும் நடைபெற்றது. இறந்தவர்களின் நினைவாக 37 மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு பின்னர் சமய பிராத்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. பூஜையின் பின்னர் மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு பாதிக்கபட்ட மக்களுக்கு மலையக அரசியல்வாதிகள் அரசாங்கம் உடனடியாக வீடுகளை அமைத்து மீள்குடியேற்றத்தினை செய்யுமாறு கோரி பேரணியை நடத்தினர் இதன்போது ஆண்கள் பெண்கள் என 300 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் அத்தோடு மலையக பிரதேசத்தில் பல தோட்டங்களில் இன்னும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான இடங்களை அதிகாரிகள் இனங்கண்டு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரார்த்தனையில் கலந்துகொண்ட மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்
நேபாள முதல் பெண் அதிபராக பித்யாதேவி பண்டாரி தெரிவு-
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட, பித்யாதேவி பண்டாரி அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஒரு மாதத்தில் அதிபருக்கான தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதால் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பித்யாதேவி பண்டாரியும், நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் குல்பகதூர் குருங் என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இதில் பித்யாதேவி பண்டாரி 327 வாக்குகள் பெற்று அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குல்பகதூர் குருங் 214 வாக்குகளைப் பெற்றார். இதனையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கர்டி, நேபாளத்தின் புதிய அதிபராக பித்யாதேவி பண்டாரியைத் தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பித்யாதேவி பண்டாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகை உபேக்ஷா சொர்ணமாலியிடம் விசாரணை-
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இன்றுகாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா செர்ணமாலி சென்றுள்ளார். இவர் ஒரு பிரபல நடிகையாவார். இலங்கை கேடரிங் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான வாக்குமுலத்தை பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடகர் பந்துல விஜேவீரவும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவுக்கு நாளை சமூகமளிக்க முடியாதிருப்பதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் அடுத்த மாதம் 20 ஆம் திகதியின் பின்னரே இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தனது சட்டத்தரணி ஊடாக நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய விசேட குழு இலங்கை வருகிறது-
ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் கிரேஸ் ஆசிர்வாதன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை வரும் அந்த குழுவினர் 5 நாட்;கள் நாட்டில் தங்கியிருந்து, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தின் பொருட்டு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளனர். பின்னர் அவர்கள் ஐரோப்பிய சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள், பிக்குகள் உள்ளிட்ட 39 மாணவர்கள் கைது-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் 39 மாணவர்கள் கொழும்பு 04, பம்பலப்பிட்டி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் இரண்டு பிக்கு மாணவர்களும் மாணவிகள் ஐவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.