தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்-

jail.......தம்மை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் எந்தவித விசாரணையும் இன்றி 10 தொடக்கம் 20 வருடங்கள்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக்கோரியே இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இலங்கை அரசு கடந்த வாரம் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே திட்டமிட்டபடி தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லாட்சி அரசிலும் தாம் ஏமாற்றப்படுவதாகவும், தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு முடிவு கட்டுவதற்காகவே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். எனவே நாளை மறுதினம் திங்கள்முதல் திட்டமிட்ட விதத்தில் இப்போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

யாழில் தமிழ் பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை-

policeஇலங்கை பொலிஸ் சேவைக்கு தமிழ் பொலிஸாரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ் சென்றிருக்கும் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவினர் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான முதலாவது நேர்முகத் தேர்வை நடத்தினார்கள். இன்றைய தினம் கல்விச் சான்றிதழ்கள் பார்வையிடப்பட்டதுடன் அவர்களுடைய உயரம், நெஞ்சு சுற்றளவு என்பன அளவிடப்பட்டுள்ளன. இந்த நேர்முகப் பரீட்சைக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் சமூகமளித்திருந்தார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் இன்றைய நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இரு ஆண்டுகளில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை-

nic (3)இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் இரு வருடங்களுள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீவிரமாக முயன்று வந்த போதிலும் அதற்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப் பெறவில்லை. ஆனால் தற்போது அதற்கான அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் இரு ஆண்டுகளில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நாடுகளில் இலங்கைக்கு 6ஆவது இடம்-

eeeஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்காத நாடுகள் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4ஆவது இடத்தில் இருந்தது. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற இம்முறை அந்த அறிக்கையின் படி முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் ஈராக்கும் உள்ளன. மற்றும் சிரியா மூன்றாவது இடத்திலும் பிலிபைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இலங்கையைவிட முன்னிலையில் இருக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தை விட புதிய அரசாங்கத்தினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இலங்கை இந்த முறை இரண்டு இடங்கள் பின்தள்ளி 6ஆவது இடத்தில் காணப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மக்களுக்கு வேண்டுகோள்-

abiseசிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக்கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு 1290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 1202 முறைப்பாடுகள் தேவையற்றது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் சிறுவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள், சர்வதேச பாடசாலைகளின் கட்டணப் பிரச்சினைகள், வீடு, காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கும்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பிரச்சினைகளை முறையிடும் சந்தர்ப்பங்கள் இழக்கப்படுகின்றன. ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகளை மாத்திரம் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் அறிவுறுத்திக் கூறியுள்ளது.

விபத்துக்களை குறைப்பது பற்றி பஸ் சாரதிகளுக்கு பயிற்சி-

busஅடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்தின்போது அனுமதிக்கப்பட்ட சாரதிகளுக்கு மாத்திரமே போக்குவரத்து அனுமதி வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது காணப்படும் விபத்துக்களை குறைப்பதற்காக பஸ் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரிசிரி தெரிவித்துள்ளார் குறித்த பயிற்சியினை பயணிகள் போக்குவரத்தின் விசேட தகைமையாக கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் அனுமதியின்றி பயணிகள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் அனுமதியின்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வாழ்த்து-

europ1மரண தண்டனையை நீக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் யோசனைக்கு ஆதரவளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை என்பது திருப்பிப் பெற முடியாத ஒன்று. இது மனிதாபிமானத்துக்கு எதிரானது என்பதுடன், மனிதர்களின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையை பாதிக்கிறது. எனவே இதனை உலகில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.